/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள், மாயமாகும் பஸ்கள் தவிப்பில் கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள்
/
சேதமான ரோடுகள், மாயமாகும் பஸ்கள் தவிப்பில் கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள்
சேதமான ரோடுகள், மாயமாகும் பஸ்கள் தவிப்பில் கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள்
சேதமான ரோடுகள், மாயமாகும் பஸ்கள் தவிப்பில் கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள்
ADDED : டிச 24, 2024 05:12 AM

வடமதுரை: சேதமான ரோடுகள், போக்குவரத்து வசதி இல்லாமை, விசேஷங்கள் நடத்த இயலாத சமுதாய கூடங்கள் என கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
செட்டிகளத்துார், புதுக்கொம்பேறிபட்டி, வல்லமகொண்டம நாயக்கனுார், ஸ்ரீராமபுரம், வெங்கடாசலபுரம், செம்மனாம்பட்டி, காடையனுார், ஊரானுார், கருங்கல்பட்டி, கொம்பேறிபட்டி, சீத்தப்பட்டி, மம்மானியூர், அரசபுரம், மேற்கு களம் என பல கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் கடைசி மலை கிராமமான மம்மானியூருக்கு ஒரு நாளில் 3 டிரிப் மட்டுமே பஸ் வசதி உள்ளது.
அதுவும் முழுமையாக இல்லாமல் வாரத்தில் சில நாட்கள் பாதி வழியிலே திரும்பி சென்றுவிடுவதால் மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
சீத்தப்பட்டி, கருங்கல்பட்டி, மம்மானியூர் ரோடுகள் சேதமடைந்து கிடக்கின்றன. பல இடங்களில் ரோட்டில் நீர் தேங்க விரைவில் சேதமடைந்துவிடுகிறது.
இதனால் மீண்டும் ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை மக்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர்.
5 கி.மீ., துாரம் நடைதான்
கே.சீரங்கன், முன்னாள் ஊராட்சி தலைவர், வெங்கடாஜலபுரம்: வெங்கடாஜலபுரம் முத்தாலம்மன் கோயில் பகுதியில் சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். மம்மானியூருக்கு தற்போது 3 டிரிப் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் இந்த பஸ் சேவை அவ்வப்போது 'கட்' சர்வீஸ் போல் கொம்பேரிபட்டியுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால் அங்கிருந்து 5 கி.மீ., துாரத்திற்கு நடந்து வர வேண்டியுள்ளது.
காலை 10:30 மணிக்கு ஸ்ரீராமபுரத்துடன் திரும்பி சென்ற பஸ் சேவை தற்போது கொம்பேறிபட்டியுடன் திரும்புகிறது.
இதை மம்மானியூருக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். சமுதாய கூட வசதி இல்லாததால் கிராம மக்கள் பந்தல் அமைத்தே விழாக்கள் நடத்த வேண்டியுள்ளது.
-தேவை நேர மாற்றம்
வி.செல்வராஜ், சமூக ஆர்வலர், ஜங்கால்பட்டி: ஊராட்சி மக்களில் பெரும்பகுதியினர் வெளியூர்களுக்கு செல்ல செட்டிகளத்துார் பஸ் நிறுத்தத்திற்கே வர வேண்டும். செட்டிகளத்துாரில் ரோட்டில் தேங்கும் மழை நீர் வெளியேற பயணியர் நிழற்கூடம் பின்புறமாக வடிகால் அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும்.
மழை நீர் வடிந்தோட வழியின்றி ரோட்டிலே தேங்கி நிற்பதால் ரோடு விரைவில் சேதமாகிறது. பொது சுகாதார வளாக வசதியில்லாதால் பலரும் திறந்த வெளியை நாடும் நிலை உள்ளது.
இரவு 7:30 மணிக்கு வேடசந்துார் திசையில் ஒரே நேரத்தில் ஒருசேர இரு அரசு பஸ்கள் செல்லும் நிலை உள்ளது. இதில் திண்டுக்கல்லில் இருந்து அய்யலுார் வந்து வேடசந்துார் செல்லும் டவுன் பஸ்சை ஒரு மணி நேரம் பின் செல்லும் வகையில் நேர மாற்றம் செய்ய வேண்டும்.
-சுற்றுச்சுவர் அமைக்கலாமே
எம்.கருப்பையா, ஊராட்சி துணைத் தலைவர், ஊரானுார்: மம்மானியூருக்கு காலை 10:00 மணிக்கு கூடுதலாக ஒரு பஸ் இயக்கலாம். அருகில் இருக்கும் கரட்டுப்பகுதியில் சேகரமாகும் மழை நீர் பள்ளமான பகுதியில் இருக்கும் ஊரானுாருக்குள் இறங்குவதால் மண் அரிப்பு, ரோடு பாதிப்படைகிறது.
இதனால் கரட்டுப்பகுதியின் அடிவாரத்தில் தடுப்புச்சுவர் கட்டி நீரை ஓடைக்கு திருப்ப வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
ஊரானுாருக்கு காவிரி நீர் திட்டம், சமுதாய கூடம், நாடக மேடை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மயானத்திற்கு அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
ஏ.எம்.ராஜரத்தினம், ஊராட்சி தலைவர், கொம்பேறிபட்டி:
மம்மானியூர், காடையனுார், வல்லமகொண்டநாயக்கனுார். கருங்கல்பட்டி, செட்டிகளத்துார், சீத்தப்பட்டி,வெங்கடாஜலபுரம் பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
செட்டிகளத்துாரில் ரூ.6.40 லட்சத்தில் வடிகால் பணி, செட்டிகளத்தூர் நால்ரோடு கருங்கல்பட்டியில் சிமென்ட் ரோடுகள், கொம்பேறிபட்டி, காடையனுாரில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. மம்மானியூர் வரை கூடுதல் பஸ் சேவை இயக்கவும், சேதமான ரோடுகளை புதுப்பிக்கவும் வலியுறுத்தி உள்ளோம்.