/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நட்சத்திர மரங்களை வளர்க்கும் குதுப்பணம்பட்டி மக்கள்
/
நட்சத்திர மரங்களை வளர்க்கும் குதுப்பணம்பட்டி மக்கள்
நட்சத்திர மரங்களை வளர்க்கும் குதுப்பணம்பட்டி மக்கள்
நட்சத்திர மரங்களை வளர்க்கும் குதுப்பணம்பட்டி மக்கள்
ADDED : மார் 31, 2025 05:24 AM

குதுப்பணம்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் புதுமையாக 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களையும் ஒரே கிராமத்தில் வளர்ப்பதற்காக ஆர்வம் காட்டுகின்றனர்.
வேடசந்துார் தொகுதியில் மழையளவு குறைந்ததற்கு மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதும், மலைகளில் வன வளம் சிதைக்கப்பட்டதும் முக்கிய காரணம். இதனால் வறட்சி பாதிக்கும் பகுதியாகவே நீடிக்கிறது. மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கையாக அரசு, தனியார் இடங்களில் மரங்களை வளர்க்க பல அமைப்புகள் ஆர்வம் காட்டுகின்றன. இவர்களுள் ஒரு குழுவாக மரங்கள் வளர்ப்பிலும் புதுமையாக 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களாக தேர்வு செய்து ஆர்வமாக வளர்க்கின்றனர் நல்லமனார்கோட்டை ஊராட்சி குதுப்பணம்பட்டி கிராமத்தினர். தற்போது 100 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகள் நினைவாக 94 மரங்களை நட்டு, உள்ளூர் பள்ளி குழந்தைகள் ஒத்துழைப்புடன் வளர்த்தனர். 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களை வளர்க்க முடிவு செய்தனர்.
இங்கு வில்வம், பலா, ஆல் என பல மரங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்தன. இதனால் எஞ்சிய மரங்களை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து வந்து நடவு செய்தனர்.
கிராமத்தில் எட்டி (அசுவனி), நெல்லி (பரணி), அத்தி(கிருத்திகை), நாவல் (ரோகினி), கருங்காலி(மிருகசிரிஷம்), செங்கருங்காலி(திருவாதிரை), மூங்கில்(புனர்பூசம்), அரசு (பூசம்), புன்னை(ஆயில்யம்), ஆல்(மகம்), பலாசு (பூரம்), அலரி (உத்திரம்), ஆத்தி (அஸ்தம்), வில்வம் (சித்திரை), மருதம் (சுவாதி), விளா (விசாகம்), மகிழம்(அனுஷம்), பராய்(கேட்டை), மரா(மூலம்), வஞ்சி(பூராடம்), பலா(உத்திராடம்), எருக்கு (திருஓணம்), வன்னி (அவிட்டம்), கடம்பு (சதயம்),தேமா (பூரட்டாதி), வேம்பு (உத்திரட்டாதி), இலுப்பை (ரேவதி) என 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகள் வளர்த்தனர்.
மரங்கள் உதவுகிறது
பி.பூமிநாதன், தலைவர், டாக்டர் அப்துல்கலாம் மாணவர் பேரவை, குதுப்பணம்பட்டி: 2004ல் கும்பகோணத்தில் மழலையர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். அவர்களது நினைவாக ஒவ்வொரு குழந்தைக்கும் 3 என்ற விகிதத்தில் கிராமத்திலிருந்து ரோட்டோரம், காலி இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தோம். இடையில் ஏற்பட்ட கடும் வறட்சி, விளையாட்டு மைதானம் அமைத்தல், கஜா புயல் போன்ற காரணங்களால் வளர்ந்த பல மரங்களை இழந்தோம். ஆனால் எங்களால் வளர்ந்த ஏராளமான மரங்கள் தற்போது காணப்படும் கடும் வெயில் காலத்தில் மக்களுக்கு பேரூதவியாக உள்ளது. கிடைக்கும் காலி இடங்கள், ரோட்டோரங்களில் மரங்கள் வளர்ப்பு பணியை தொடர்வோம்.
-ஆர்வமாக உள்ளது
எஸ்.செந்தில்குமார், விவசாயி, குதுப்பணம்பட்டி: விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். இங்கிருக்கும் வில்வ மரத்தின் மருத்துவ குணமறிந்து பலரும் கிராமத்தை தேடி வந்ததால், மரம் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது. இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அர்ப்பணிப்புடன் மரங்களுக்கு நீருற்றி பராமரித்தனர்.
இயற்கை, செயற்கை பாதிப்புகளால் சில நட்சத்திர மரங்களை இழந்துள்ளோம். கிராமத்தில் ஒரு பகுதியில் அரசு சார்பில் அடர்வனம் அமைக்க திட்டமிட்டு இடம் ஒதுக்கி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது விடுபட்டுள்ள நட்சத்திர மரங்களை வளர்ப்போம்' என்றார்.-

