/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடு, பயனற்ற குடிநீர் தொட்டிகள் தவிப்பில் மூக்கரபிள்ளையார்கோயில் மக்கள்
/
சேதமான ரோடு, பயனற்ற குடிநீர் தொட்டிகள் தவிப்பில் மூக்கரபிள்ளையார்கோயில் மக்கள்
சேதமான ரோடு, பயனற்ற குடிநீர் தொட்டிகள் தவிப்பில் மூக்கரபிள்ளையார்கோயில் மக்கள்
சேதமான ரோடு, பயனற்ற குடிநீர் தொட்டிகள் தவிப்பில் மூக்கரபிள்ளையார்கோயில் மக்கள்
ADDED : டிச 08, 2024 04:55 AM

- வடமதுரை : சேதமான ரோடு, பழுதான குடிநீர் திட்டங்கள், பயணியர் நிழற்குடை வசதியின்மை என மூக்கரபிள்ளையார் கோயில் கிராம மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
வடமதுரை ஒன்றியம் மோர்பட்டி ஊராட்சியில் உள்ளது மூக்கரபிள்ளையார் கோயில். திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலை, தென்னம்பட்டி கோடாங்கிசின்னான்பட்டி ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இக்கிராமம் உள்ளது. இந்த ரோடுகள் கிராமத்தை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதி குடியிருப்புகளாக பிரித்துள்ளன.
மூக்கரபிள்ளையார்கோயில் பகுதியில் ரோட்டின் மேற்கு பக்கம் அமைக்கபட்டுள்ள இரு குடிநீர் தொட்டிகளுக்குரிய நீர் ஆதாரமாக ஆர்.புதுார் ஓடைப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் மூலம் சப்ளை தரப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் நான்குவழிச்சாலை பராமரிப்பு நிர்வாகம் சார்பில் ரோட்டோரம் மரக்கன்று நடவு செய்ய குழி தோண்டிய போது குழாய் பாதை சேதமானது. தற்போது வரை சீரமைக்காததால் குடிநீர் தொட்டிகள் பயனற்று கிடக்கிறது. இங்கு பல்வேறு அவசிய, அடிப்படை வசதி குறைபாடுகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேவை விபத்து எச்சரிக்கை
எஸ்.பி.சவடமுத்து, விவசாயி, மூக்கரபிள்ளையார்கோயில்:மூக்கரபிள்ளையார் கோயில் கிராமத்தை திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலை இரு கூறாக பிரிக்கிறது.
அதோடு தென்னம்பட்டி துவங்கி கோம்பை வரை செல்லும் ரோடு குறுக்கிடும் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இங்கு நான்கு வழிச்சாலை பகுதி வளைவாக இருப்பதால் ரோடு பிரியும் பகுதியில் இரவு நேரங்களில் சென்டர் மீடியனில் வாகனங்கள் மோதி விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. இங்கு உயர் மட்ட தெருவிளக்கு , ரோடு பிரிவை வாகனங்களுக்கு உணர்த்தும் வகையில் விபத்து எச்சரிக்கை கட்டமைப்பை அமைக்க வேண்டும். இதன் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுவதுடன், உள்ளூர் மக்களும் பாதுகாப்புடன் ரோட்டை கடந்து செல்ல முடியும்.
-பெயர் பலகை வேண்டும்
கே.தங்கமணி, ஓய்வு அரசு பஸ் டிரைவர், ஜி.குரும்பபட்டி:மூக்கரபிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து பிரியும் கஸ்பா அய்யலுார் ரோடு அகலம் குறைவாக இருப்பதால் வாகனங்கள் ஒதுங்கி செல்லும்போது சாய்ந்துவிடுமோ என அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
இங்குள்ள நான்குவழிச்சாலையில் மூக்கரபிள்ளையார்கோயிலுக்கென பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பயணியர் நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் நேரங்களில் அதிக சிரமம் ஏற்படுகிறது. ஜி.குரும்பபட்டி இருந்து கோடாங்கிசின்னான்பட்டி ரோட்டில் பேரூராட்சி எல்லை வரை ரோடு பள்ளமாகி குண்டும், குழியுமாக வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இங்கு ஜி.குரும்பபட்டி ஊர் இருப்பதை காட்டும் வகையில் பெயர் பலகை அமைக்க வேண்டும்.
புதுப்பிப்பு பணியில் தாமதம்
பி.ஈஸ்வரிபாரதி, ஒன்றிய கவுன்சிலர், மோர்பட்டி : மூக்கரபிள்ளையார் கோயில் பகுதியில் பிரிந்து கிடக்கும் 4 குடியிருப்பு பகுதிகளுக்கு சேர்த்து ஒரு மேல்நிலை தொட்டி அமைக்க தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன்.
பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்கவும், உயர்மட்ட விளக்கு அமைக்கவும் ஒன்றிய நிர்வாகம் மூலம் நான்குவழிச்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்தை வலியுறுத்தி உள்ளோம். இப்பகுதியில் ஊராட்சி பகுதிக்குள் இருக்கும் ரோடு அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையாததால் புதுப்பித்தல் பணி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் கூடுதல் பஸ் டவுன் சேவை இயக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.