ADDED : செப் 26, 2026 10:13 PM
சாணார்பட்டி, செப்.26-
கோம்பைபட்டி ஊராட்சியில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளால் மக்கள் தினம் தினம் அவதிப்படுவதும், பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் நடந்து சென்று சிரமப்படுவதும் தொடர்கிறது.
சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சியில் பெருமாள்கோவில்பட்டி, கனத்துவீடு, பாப்பம்பட்டி, கோம்பைப்பட்டி, கடுக்காபட்டி, சரளப்பட்டி, மலைப்பட்டி, சின்னகாளிபட்டி, படுகைகாடு, கொரசின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளன.
ரோடுகள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் ரோடு போல் காணப்படுகின்றன. இதனால் ரோட்டில் செல்லும் மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கிராமங்களில் அலைபேசி டவர் எதுவும் இல்லாததால் மக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல் துறையை கூட தொடர்பு கொள்ள முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
––––
பயனற்ற ரோடுகள்
ரமேஷ், விவசாயி, பாப்பம்பட்டி.
கோம்பைபட்டியில் இருந்து பாப்பம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்துள்ள நிலையில் ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பாப்பம்பட்டி, கொரசின்னம்பட்டி மலை கிராம ரோடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவை குறைந்தது இரண்டு முதல் ஐந்து கி.மீ., துாரம் கொண்டவை. ரோடு அமைக்க குறைவான நிதி மட்டுமே தேவைப்படும். கிராம சாலைகள் திட்டம் மூலம் நிதி ஒதுக்கி ரோடுகளை சீரமைக்க முன்வர வேண்டும்.
––
பஸ் வசதி இல்லை
கார்த்திகைசாமி, சமூக ஆர்வலர், கோம்பைபட்டி.
திண்டுக்கல்லில் இருந்து மலைப்பட்டிக்கு காலை 11:00 மணி, மாலை 7:00 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. மாணவர்கள் செல்லும் நேரங்களில் அரசு பஸ் எதுவும் இல்லாததால் நடந்தும், ஆட்டோக்களிலும் சென்று வருகின்றனர். இந்த பஸ்சை காலை 8:00 மணி, மாலை 5:00 மணிக்கு இயக்கினால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அலைபேசி டவர் வசதி இல்லாததால் இங்குள்ள 500க்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் பின்தங்கி உள்ளனர். மருத்துவ அவசரத்துக்கும் இதே நிலை தான். தனித்தீவாக உள்ள இப்பகுதியில் அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
