/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லாத பொதுக்கழிப்பறை வசதியால் மக்கள் அவதி
/
இல்லாத பொதுக்கழிப்பறை வசதியால் மக்கள் அவதி
ADDED : ஆக 28, 2025 05:57 AM

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் வட கோடியில் உள்ள குஜிலியம்பாறை ஒன்றியம், தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தாலுகா, யூனியன், பேரூராட்சி, வங்கிகள் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் சுற்றுப் பகுதிகளில் இருந்து கரூர் திண்டுக்கல் செல்வோர் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் வந்து தான் செல்ல வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளதால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். தினமும் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த ஒரே ஒரு பொதுக் கழிப்பறையும் தற்போது செயல்பாடின்றி மூடப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் மக்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர். சிலருக்கு பஸ் சேராமல் வாந்தியே வந்தாலும், பஸ் ஸ்டாண்டில் இறங்கினால் கழிப்பறையோ தண்ணீர் வசதியோ இல்லை.இதே போல் தான் பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் பொது கழிப்பறை வசதி இல்லை.
மக்களின் நலன் கருதி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பாளையம் வாரச்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பொது கழிப்பறையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் அவதி தர்மர், காங்., வட்டாரத் தலைவர், குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் இருந்து கரூர், திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, வேடசந்தூர், வெள்ளோடு என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப் படுகின்றன. ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் ஒரு கழிப்பறை வசதி, பஸ் ஸ்டான்டில் குடிநீர் வசதி இல்லாதது பொது மக்களை அவதிக்கு உள்ளாக்குகிறது.
அத்தியாவசியம் சக்திவேல், சமூக ஆர்வலர், குடப்பம், குஜிலியம்பாறை : தாலுகா தலைநகர் குஜிலியம்பாறை. ஆனால் குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். மாலை நேரங்களில், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கூடுதலான மாணவிகள், பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ் ஏறி செல்கின்றனர். அதேபோல் வயதானவர்கள், நோயாளிகள், சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் வந்து செல்லும் நிலையில் கழிப்பறை வசதி என்பது மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்யாமல், விரைந்து நடவடிக்கை எடுத்து, போதிய கழிப்பறை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்றார்.

