ADDED : ஜன 15, 2024 04:38 AM
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் பொருட்களை வாங்க கடைவீதிகளில் நேற்று திரண்டனர். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். காலை முதலே கடைவீதிகளுக்கு பொதுமக்கள் வருகை இருந்தாலும் மாலையில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பானைகள், கரும்புகள், மஞ்சள் போன்வற்றை வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் தாடிகொம்பு, சாணார்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலகுண்டு தொடங்கி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் நேற்று முதலே கரும்பு விற்பனை தொடங்கியது. மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது. காந்தி மார்க்கெட், மெயின்ரோடு, சாலைரோடு, ஏ.எம்.சி., ரோடு, நாகல்நகர் உள்பட பல பகுதிகளில் கரும்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்காக ரோட்டோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
கூரைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை அடங்கிய ஒரு கட்டு, மஞ்சள் குலைகள் பல வண்ண கோலப்பொடிகள் போன்றவற்றையும் வாங்கினர். ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கவரும் வகையில் ஜவுளிக்கடைகளில் பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விற்பனையும் அமோகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 20 டன்னிற்கும் மேலாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.