மாணவி தற்கொலை
சின்னாளபட்டி: ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி செல்வம். இவரது 11 வயது மகள், இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வந்த மாணவி வீட்டில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரித்தனர்.
திருடிய மூவர் கைது
திண்டுக்கல் : குட்டத்துப்பட்டி மயிலாப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி இன்னாசி49. இவரது தோட்டத்தில் உள்ள மோட்டார் ஒயர்களை மஞ்சம்பட்டியைச் சேர்ந்த பிரவீன், 17 வயது சிறுவர் உட்பட மூவர் திருடினர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்: திருச்சி மணப்பாறை கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லெனின் மெர்சி 30. இவர் திருச்சி நீதிமன்றத்தில் ஓ.ஏ.,வாக பணிபுரிகிறார். இவரும் திண்டுக்கல் தாமரைப்பாடி அண்ணா நகரை சேர்ந்த நாகராஜன் 30, இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் காதலை வீட்டில் தெரிவித்த நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இருவரும் சில தினங்களுக்கு முன் திருச்சியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்தனர். இதனிடையே நேற்று பாதுகாப்பு கோரி திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வாலிபர் பலி
திண்டுக்கல்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நரேன்முண்டா34. குளத்துார் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மதுபோதையில் கீழே தடுமாறி விழுந்து இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி தற்கொலை
திண்டுக்கல்: குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ்44. பிப்.17ல் மன உளைச்சலில் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

