தாய், மகள் மர்மமாக இறப்பு
சாணார்பட்டி: சாணார்பட்டியை சேர்ந்த கமலம் 78, இவரது மகள் பாப்பாத்தி 55. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசித்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் குடியிருந்து வந்த வீடு இடிந்தது. இதனால் வயது முதிர்வின் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்த தாய், மகள் இருவரும் சாணார்பட்டி காளியம்மன் கோயில் பகுதியில் தங்கினர். அப்பகுதி பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டனர். இந்நிலையில் கமலம்,பாப்பாத்தி இருவரும் மூச்சுப் பேச்சின்றி படுத்திருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் சாணார்பட்டி வி.ஏ.ஓ.,எஸ்.ஐ., வேலுமணி உள்ளிட்ட போலீசார் இருவர் உடலையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா போலீசார் சிறுமலை,தோட்டனுாத்து,என்.ஜி.ஓ.,காலனி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்ற தண்டல்காரன்பட்டியை சேர்ந்த பூபதி37, மேட்டூரை சேர்ந்த சத்தியராஜ்39,குள்ளனம்பட்டியை சேர்ந்த குமரேசன்55,ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இளம்பெண் மாயம்
நத்தம்: நத்தம் குட்டுப்பட்டி- ஆத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 48. இவரது மகள் நாச்சம்மாள் 23. இவர் ஜூன் 21-ல் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. நத்தம் போலீசில் புகாரளிக்க அவர்கள் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
நத்தம்: நத்தம் மதுரை ரோட்டில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள கடைகளில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகைகடையில் சோதனை செய்தபோது விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. மதுரை மாவட்டம் மேலுார் அட்டப்பட்டியை சேர்ந்த ராஜா 36.என்பவரை கைது செய்த நத்தம் போலீசார் அவரிடமிருந்து 105 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நகை திருட்டு
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி கருப்பன கவுண்டர் தெருவை சேர்ந்தவர் லதாமங்கேஷ்கர் 81. இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு சென்றபோது கதவு உடைக்கப்பட்டு அரை பவுன் நகை திருடு போனது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி காயம்
குஜிலியம்பாறை: கரூரை சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன் 55. இவர் தனது காரை கரூரிலிருந்து வடமதுரை நோக்கி ஓட்டினார். குஜிலியம்பாறை ராமகிரி பிரிவு அருகே வந்போது ுறுக்கே வந்த டூ வீலரில் மோதாமல் இருக்க இடது புறமாக காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த பெட்டி கடைக்குள் புகுந்தது. கடைக முன்பு நின்ற குஜிலியம்பாறை சி.அம்மாபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி,காயமடைந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒருவர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் பள்ளங்கி கடுக்காய் சோலையை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 57, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பயணியிடம் தகராறு
பழநி: பழநியில் சுவாமி தரிசனம் செய்த பின் கொடைக்கானல் செல்ல பஸ் ஏறிய கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் கொடைக்கானல் பஸ்சில் ஏறி முன்பகுதியில் அமர முயன்றனர். அப்போது கண்டெக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக பஸ் பழநி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டது. அங்கே கண்டக்டருக்கும் பயணிக்கும் சமரசம் ஏற்பட்ட பின் பஸ் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பஸ்சில் பயணிகள் காத்திருந்தனர்.