ADDED : ஜூலை 14, 2025 12:26 AM
இருவர் பலி
வடமதுரை: திண்டுக்கல், பாலகிருஷ்ணபுரம், சந்துரு நகரைச் சேர்ந்தவர் ம.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா 50. சென்னையிலிருந்து ரயிலில் திண்டுக்கல் வந்த போது தாமரைப்பாடி, செட்டியபட்டி பகுதியில் தவறி விழுந்து இறந்தார். அதே பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்த மொண்டியபட்டி விவசாயி கிருஷ்ணன் 60, ரயில் மோதி இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
பட்டிவீரன்பட்டி : சித்தரேவு மயான கொட்டகையில் அடையாளம் தெரியாத நபர் துாக்கில் தொங்கினார். போலீசார் விசாரணையில் இறந்தவர் பள்ளபட்டியை சேர்ந்த செல்வம் 42 என்பது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து விபத்து
வடமதுரை : திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த பூபதி 38, சூர்யா ஆகியோர் திருச்சி பகுதியில் பால் பாக்கெட்களை சப்ளை செய்து விட்டு நேற்று அதிகாலை வேனில் திண்டுக்கல் திரும்பினர். திருச்சி- ---- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே வந்தபோது முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இருவரும் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
மூவர் காயம்
வேடசந்தூர்: உசிலம்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி செல்லச்சாமி 50. இவர், தனது மனைவி ராஜாமணியுடன் 45, வேடசந்தூர் கோகுல் நகர் அருகே வந்த போது, எதிரே வந்த செங்குறிச்சி பாண்டியனுார் பெருமாள் மகன் அருண்குமார் 24, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. மூவரும் காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த செல்லச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிராக்டர் மோதி பலி
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணை குடியிருப்பை சேர்ந்தவர் வனம் 45. இவர் கடைக்குச் சென்றுவிட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, மருதாநதி அணை அருகே எதிர் திசையில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த காளிதாஸ் ஓட்டி வந்த டிராக்டர், பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொத்தனார் பலி
நிலக்கோட்டை: தம்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நீலமேகம் 30. கொத்தனாரான இவர் டூவீலரில் மதுரை- பெரியகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். மினி ஆட்டோ எதிர்பாராத விதமாக டூவீலரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நீலமேகம், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாடிய மூவர் கைது
நத்தம் : செல்லப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் 48, பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக் 34,மூங்கில்பட்டியை சேர்ந்த அரவிந்த் 24 ஆகியோர் செல்லப்பநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தபோது, நத்தம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள்,பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் தற்கொலை
நத்தம் : கரூர் மாவட்டம் மண்மங்களத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகள் பிரியதர்ஷினி 30. இவர் கரூரை சேர்ந்த முகமது இஸ்மத் 34, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வந்த பிரியதர்ஷினி நத்தம் அருகே சேர்வீடு- மேம்பால பகுதியில் உள்ள தோப்பில் விஷத்தை குடித்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.