/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியில் போலீஸ்
/
'கொடை'யில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியில் போலீஸ்
'கொடை'யில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியில் போலீஸ்
'கொடை'யில் போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியில் போலீஸ்
ADDED : செப் 29, 2024 05:16 AM

கொடைக்கானல் : - கொடைக்கானலில் தொடரும் நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக வானியியற்பியல் மையம் வழியாக ரோஜா பூங்கா, மோயர் சதுக்கம், பைன்பாரஸ்ட், குணா குகை, துாண்பாறை, பசுமை பள்ளதாக்கு என பாம்பார்புரம் வழியாக நகரை வந்தடையும் நடைமுறை இருந்து வருகிறது. தொடர் விடுமுறை , சீசன் நேரங்களில் பல மணி நேர போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதியடைந்தனர்.
இந்நிலையை தவிர்க்க பொதுமக்களிடம் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கருத்து கேட்டறிந்தார்.
சோதனை அடிப்படையில் தலைகீழ் மாற்றமாக பாம்பார்புரம் கோக்கர்ஸ்வாக் பசுமை பள்ளதாக்கு வழியாக மோயர் சதுக்கம் சென்று வானியியற்பியல் மையம் வழியாக வாகனங்கள் நகரை வந்தடையும் போக்குவரத்து மாற்றம் செய்து திருப்பி விடப்பட்டன.
இம்முயற்சியில் உட்வில் ரோடு, கிளப் ரோடு, கோக்கர்ஸ்வாக் , செவன் ரோடு, அண்ணாசாலையில் ரோட்டின் இருபுறம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதித்தது. போலீசார் ஒழுங்குபடுத்துவதில் சிரமப்பட்டனர்.
கூடுதல் போலீசார் நியமிப்பது, ஏரிச்சாலையை சீர் செய்வது, ஒரு வழித்தட பகுதி குறித்து பதாகை அமைப்பது, வனச் சுற்றுலா தலங்களில் பார்க்கிங் வசதியை முறைப்படுத்தி, கூடுதல் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தல் உள்ளிட்ட சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
தற்போதைய காலாண்டு தேர்வு விடுமுறையில் வருகை தரும் சுற்றுலா வாகனங்களை கணக்கிடும் முயற்சி பலனளிக்காது. ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் இம்முயற்சி பலன் தருமா என்பதை போலீசார் சுய பரிசோதனை செய்தால் இது சாத்தியமா என தெரிய வரும்.
டி.எஸ்.பி., மதுமதி கூறுகையில்,'' கொடைக்கானலில் தற்போதைய போக்குவரத்து மாற்றம் 10 தினங்கள் வரை நடைமுறையில் இருக்கும்.
இதில் கிடைக்கும் அனுபவத்தை பொறுத்து எதிர்வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் கண்டறியப்படும். இதற்காக கூடுதல் போலீசார் போக்குவரத்து மாற்றத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் ''என்றார்.