/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் போலியோ சொட்டு மருந்து முகாம்
/
திண்டுக்கல்லில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ADDED : மார் 04, 2024 07:36 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 1313 இடங்களில் 1,70,197 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் குழந்தைகளோடு பங்கேற்றனர்.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், என 1313 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்களிலும், 33 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 48 போக்குவரத்து முகாம்களிலும் -6 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1,70,197 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 5343 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். திண்டுக்கல் கமலா நேரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். துணை இயக்குநர் வரதராஜன், மாநகராட்சி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர். வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி, தென்னம்பட்டியில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு போலியோ சொட்டு மருந்து முகாமை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். நத்தம் பகுதியில் உலுப்பகுடி, வத்திபட்டி,செந்துறை, சிறுகுடி,கோசுகுறிச்சி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடந்தது. நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தொடங்கி வைத்தார்.

