/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் மழையால் மூழ்கிய பொட்டிநாயக்கன்பட்டி சுரங்கப்பாதை
/
மாவட்டத்தில் மழையால் மூழ்கிய பொட்டிநாயக்கன்பட்டி சுரங்கப்பாதை
மாவட்டத்தில் மழையால் மூழ்கிய பொட்டிநாயக்கன்பட்டி சுரங்கப்பாதை
மாவட்டத்தில் மழையால் மூழ்கிய பொட்டிநாயக்கன்பட்டி சுரங்கப்பாதை
ADDED : அக் 14, 2024 08:17 AM

வடமதுரை : அய்யலுார் கோம்பை, புத்துார் மலைப்பகுதிகளில் நேற்றுமுன்தினம் பெய்த கன மழையால் பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொட்டிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் முழ்கியது.
தங்கம்மாபட்டி பொட்டிநாயக்கன்பட்டி இடையே இருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டு 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி மதிப்பில் சுரங்க பாதையாக மாற்றப்பட்டது. இங்கு சுரங்கப்பாதைக்கு கூரை அமைக்கப்படவில்லை. இங்கு மழை நேரத்தில் விரைவாக சுரங்கபாதையில் 4 அடி வரை நீர் தேங்கும்.
நேற்றுமுன்தினம் இங்கு இரவு பெய்த கனமழையால் சுரங்கபாதை முழுவதும் முழ்கியது. அருகிலிருக்கும் கீரனுாரில் இருக்கும் புதுவாடி ரயில்வே சுரங்கப்பாதையும் நீரால் நிரம்பியது. அருகில் ஓடும் ஓடை நீர் பெருக்கெடுத்து மேற்கு கருஞ்சின்னானுார் கிராமத்தை சூழ்ந்தது. இங்குள்ள பெரும்பகுதி வீடுகளுக்குள் நீர் புகுந்து சேரும் சகதியாக மாறியது. இப்பகுதியில் பலரது கோழி, ஆடுக்குட்டிகளும் நீரில் அடித்து செல்லப்பட்டது.
இப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பேரூராட்சி நிர்வாகம் உணவு வழங்கியது. குறிஞ்சி நகரில் தேங்கிய நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. பேரூராட்சி நிர்வாகத்தினர் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு நீரை வெளியேற்றினர். களர்பட்டி பழனிசாமி வீட்டில் சுற்றுச்சுவர் இடிந்தது. கஸ்பா அய்யலுார் கெங்கையூரை இணைக்கும் தரைப்பாலம் சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
நத்தம்: நத்தம் சமுத்திராபட்டி சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சிறுகுடி செல்லும் ரோட்டில் நின்ற பூமரம் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சாய்ந்தது. இதனால் சிறுகுடி-நத்தம் ரோடடில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமுத்திராபட்டி இளைஞர்கள்,மக்கள் சேர்ந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
செந்துறை:- நத்தம் செந்துறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் செந்துறை குரும்பபட்டியில் மஞ்சுளா, என்பவருக்கு சொந்தமான ஒட்டு வீடு வெளிப்பக்க சுவர் பெயர்ந்து விழுந்தது. பொருட்கள் சேதமானது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.