/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகாலை தொடரும் மின்தடை; சிதைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 6வது வார்டில் அல்லாடும் மக்கள்
/
அதிகாலை தொடரும் மின்தடை; சிதைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 6வது வார்டில் அல்லாடும் மக்கள்
அதிகாலை தொடரும் மின்தடை; சிதைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 6வது வார்டில் அல்லாடும் மக்கள்
அதிகாலை தொடரும் மின்தடை; சிதைந்த ரோடுகள் ஒட்டன்சத்திரம் 6வது வார்டில் அல்லாடும் மக்கள்
ADDED : டிச 28, 2024 06:25 AM

ஒட்டன்சத்திரம்,: குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் சிரமம், அதிகாலை மின்தடையால் பாதிப்பு என ஒட்டன்சத்திரம் நகராட்சி 6 வது வார்டில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஏ.பி.பி. நகர், பழநிகவுண்டன்புதுார், லட்சுமிபுரம், சண்முகவேல்புரம், அணைப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பைபாஸ் ரோட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து பழநிகவுண்டன் புதுார், அணைப்பட்டி செல்வதற்கு நேரிடையான வழியில்லை. பல கி.மீ. ,துாரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பழநிகவுண்டன்புதுார் பகுதியில் செல்லும் ஓடையில் செடி கொடிகள் அகற்றப்பட்டு துார்வாரப்பட்டு சிமென்ட் தரை தளத்துடன் பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்துள்ள மழையில் ஓடையில் மறுபடியும் செடி கொடிகள் முளைத்துள்ளது. இதேபோல் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் செல்லும் இந்த ஓடையில் செடி கொடிகள் முளைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பைபாஸ் ரோட்டில் இருந்து பழநிகவுண்டன்புதுார் செல்லும் ரோட்டில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் டூவீலரில் செல்ல சிரமமாக உள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறும் ஓடை துார்வாரப்பட்டு சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக செடி கொடிகள் முளைத்து உள்ளன. ஏ.பி.பி. நகரில் பூங்கா, பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. லட்சுமிபுரம் பகுதியில் தெரு ரோடுகள் சேதமடைந்துள்ளது. பைபாஸ் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.பி.பி. நகர் விரிவாக்க பகுதிகளில் சாக்கடை வசதி இல்லாததால் காலியிடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும்.
தேவை சாக்கடை வசதி
கண்ணன், சமூக ஆர்வலர்: ஏ.பி.பி .,நகர் விரிவாக்க பகுதிகளில் வீடுகள் கட்டி பல ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சாக்கடை வசதி இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. காலி இடங்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்திருப்பதால் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
தெரு விளக்குகள் இல்லை
கே.மாணிக்கம், பா.ஜ., ஒ.பி.சி., அணி மாவட்டச் செயலாளர்: பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்திலிருந்து பழனி கவுண்டன் புதுார் வரை செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்கிறது. குப்பையை கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடைகளை துார் வாருவதே இல்லை. அரசு மருத்துவமனையில் இருந்து ஏ.பி.பி. நகர் செல்லும் ரோட்டின் ஓரங்களில் உள்ள புல் பூண்டுளை அகற்ற வேண்டும். பழநிகவுண்டன்புதுாரில் தேவையான இடங்களில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.
மழைக்காலத்தில் தேங்கும் நீர்
ஒ.பி.காளிதாசன், பா.ஜ., நிர்வாகி: காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறி விடுவதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக சாக்கடைகள், ரோடுப் பகுதிகளை செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. சத்யா நகர் பகுதியில் இருந்து ஏ.பி.பி .நகர் வழியாக செல்லும் சாக்கடை துார்வாரப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
கோரிக்கை நிறைவேற்றம்
சண்முகப்பிரியா, கவுன்சிலர் (தி.மு.க.,): பழனி கவுண்டன் புதுார் ஓடையை துார்வார அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக லட்சுமிபுரத்திலிருந்து பழனிகவுண்டன்புதுார் வரை தடுப்புச் சுவர் ,தரைதளத்துடன் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பழனிக்கவுண்டன்புதுாரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளம் மறுகால் செல்லும் வழியில் பாலம் கட்டப்படாமல் இருந்ததால் டூவீலர்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி வந்தது.
தற்போது இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு விபத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வார்டுக்குள் குப்பை தேங்காமல் அள்ளப்படுகிறது. வார்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.