ADDED : டிச 18, 2024 05:39 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் துணை மின் நிலையம் இல்லாமலிருப்பதால் லேசான காற்று, மழை பெய்தாலே மலைக்கிராமங்கள் இருளில் மூழ்குகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிறுமலை.
இங்கு கொடைக்கானல் போன்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிடுகின்றனர்.
சிறுமலையில் பழையூர்,புதுார்,தென்மலை உள்ளிட்ட 9 கிராமங்களில் மின்சார வசதிகள் உள்ளது. மற்ற பகுதிகளில் மின்வசதிகள் இன்னும் ஏற்படுத்தாமல் உள்ளன.
மின் வசதி உள்ள கிராமங்களுக்கு செம்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து வனப்பகுதிகள் வழியாக மின் சப்ளை செய்யப்படுகிறது.
மின்கம்பங்கள்,மின் ஒயர்கள் முழுவதும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக வருவதால் காற்று,மழை நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
நகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால் என்ன பிரச்னையால் எந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது என உடனே கண்டறியக்கூடிய வசதிகள் உள்ளது.
சிறுமலை முழுவதும் அடர்ந்த காடுகளாக இருப்பதால் என்ன பாதிப்புகளால் மின்தடை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கவே மின்வாரிய அதிகாரிகள் திணறும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் ,வேலைக்கு செல்லும் மக்கள்,விவசாய தொழிலாளிகள்,இயந்திர வேலை உட்பட அனைத்து வேலைகளும் சிறுமலை சுற்றுப்பகுதிகளில் முடங்குகிறது.
இதுதவிர குறைந்த மின்னழுத்தமும் அடிக்கடி ஏற்பட்டு மக்களை பாடாய்படுத்துகிறது. இரவு,பகல் எப்போதும் சிறுமலை பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கும் நிலை உருவாகி உள்ளது.
இதை தவிர்க்க சிறுமலையில் துணை மின் நிலையம் அமைத்தால் அடிக்கடி ஏற்படும் மின்தடை,குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம்.
பரிசீலனை செய்யப்படும்
திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக துணை மின் நிலையம் அமைப்பதற்காக உயர் அதிகாரிகளுக்கு பட்டியல் தயாரித்து அனுப்பி உள்ளோம். விரைவில் பல பகுதிகளில் அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
சிறுமலை பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அங்கேயும் துணை மின் மையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.