/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்தடை அறிவிப்பில் தேவை முன்னெச்சரிக்கை
/
மின்தடை அறிவிப்பில் தேவை முன்னெச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 05:44 AM
வடமதுரை: சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 3வது வாரத்தில் துவங்குவதால் பராமரிப்பு மின்தடை அறிவிப்புகள் விஷயத்தில் முன்கூட்டிய திட்டமிடலுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும்.
மின் நிலையங்களில் மாதந்தோறும் ஒரு நாள் பகல் நேரத்தில் மின் சப்ளையை நிறுத்தி பராமரிப்பு பணிகள் செய்வது வழக்கம். இதற்காக முன்கூட்டியே தேதிகள் முடிவு செய்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சட்டசபை கூட்ட தொடர் நடக்கும் நாட்களில் மின்தடை செய்வதை தவிர்ப்பதை நீண்ட காலமாக மின் வாரியம் பின்பற்றுகிறது.
முன்பு சட்டசபை கூட்டத்தொடர் நடந்த தேதிகளில் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிப்பு வெளியானது. இதை நம்பி பல தொழிலகங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்த நிலையில் சட்டசபை கூட்ட தொடரால் மின்தடையை ரத்து செய்து வழக்கம் போல மின்சப்ளை இருந்தது.
பல தொழில்நிறுவனங்கள் மின்சப்ளை இருந்தும் செயல்பட முடியாமல் போனதால் உற்பத்தி பாதித்தது. தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் நேரத்தில் மின்தடை அறிவிப்பு விஷயத்தில் குழப்பம் இல்லாமல் மின்வாரியம் செயல்பட வேண்டும் என தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

