/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அய்யலுாரில் கழிவு நீர் சுகாதாரக்கேடால் தவிக்கும் வியாபாரிகள்
/
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அய்யலுாரில் கழிவு நீர் சுகாதாரக்கேடால் தவிக்கும் வியாபாரிகள்
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அய்யலுாரில் கழிவு நீர் சுகாதாரக்கேடால் தவிக்கும் வியாபாரிகள்
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அய்யலுாரில் கழிவு நீர் சுகாதாரக்கேடால் தவிக்கும் வியாபாரிகள்
ADDED : ஏப் 22, 2025 06:34 AM

- வடமதுரை: அய்யலுாரில் திண்டுக்கல் சர்வீஸ் ரோடு பகுதியில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தில் கழிப்பறை தொட்டி சேதமாகி வெளியேறும் கழிவு நீரால் ஏற்படும் சுகாதாரக்கேடால் வியாபாரிகள் பரிதவிக்கின்றனர்.
அய்யலுாரில் பஸ் ஸ்டாண்ட் வசதி ஏற்படாமல் இருப்பதால் பஸ் நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாக வசதியின்றி நீண்ட ஆண்டுகளாக வெளியூர் பயணிகள் அவதிப்பட்டனர். அதோடு வியாழன் அன்று கூடும் சந்தைக்கு வருபவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். இதற்கு தீர்வு காணும் வகையில் சந்தை அருகில் பயணியர் நிழற்குடை அருகில் பேரூராட்சி மூலம் சுகாதார வளாகம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் அருகில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருக்கும் சுகாதார வளாகத்தின் தேவைக்கேற்ப பெரிதாக கழிவு நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படவில்லை. இதனால் அடிக்கடி தொட்டி நிரம்பி வழிந்தது. தனியார் வாகனம் மூலம் அவ்வப்போது கழிவு நீர் எடுத்து அகற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கழிவு நீர் தொட்டி சேதமானதால் கழிப்பறை கழிவு நீர் வெளியேறி அதே பகுதியில் தெப்பம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் கடைகள் நடத்துபவர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
.............
-
தேங்கும் கழிவு நீரால் அவதி
பி.அருள்முருகன், டூவீலர் மெக்கானிக், அய்யலுார்:இங்குள்ள சுகாதார வளாகத்தில் மேல்நிலைத் தொட்டி மூலம் ஒவ்வொரு கழிப்பறைக்கு நேரடியாக நீர் சப்ளை சென்றது. ஆனால் சிலர் திருகு அடைப்பான்களை சரிவர மூடாமல் சென்றதால் வெகு சில நாட்களிலே கழிப்பறை தொட்டி நிரம்பி வழிந்தது. இதனால் அடிக்கடி தொட்டியில் இருந்து கழிவு வெளியேற்றும் நிலை உருவானது. தற்போது அங்குள்ள ஒரு நீர் தொட்டியில் இருந்து எடுத்து அளவாகவே பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கழிப்பறை நீர் சேமிப்பு தொட்டி சேதமாகி தன்னிச்சையாக கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்பதால் கடும் சுகதாரக்கேடு ஏற்படுகிறது .
-.......
நடவடிக்கை இல்லை.
பி.சித்ரா, மளிகை கடைக்காரர், அய்யலுார்: சுகாதார வளாகத்தின் கழிவு நீர் சேமிப்பு தொட்டியின் கொள்ளளவு குறைவாக இருப்பதால் அடிக்கடி நிரம்பிவிடுகிறது. அதுவும் தற்போது உடைந்து கழிவு நீர் வெளியேறி அதே பகுதியில் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. சில கால்நடைகளும் அவற்றை குடிக்கும் அவலம் உள்ளது. துர்நாற்றத்தால் இப்பகுதியில் வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவதால் இப்பகுதி கடைகளில் வருமானம் குறைகிறது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
..........
-
தீர்வு:
-
இங்குள்ள கழிவு நீர் தொட்டி அருகில் போதியளவு அரசு இடம் இருப்பதால் சிறப்பு அனுமதி பெற்று கூடுதலாக ஸ்திரமான கழிப்பறை நீர் தொட்டியை அதிக கொள்ளளவுடன் அமைக்க வேண்டும். அதன் பின்னர் தற்போது சேதமடைந்த தொட்டியை மராமத்து பணி செய்து இரு தொட்டிகளையும் இணைக்க வேண்டும். இதன் மூலம் இங்குள்ள கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்தலாம்.
-