/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிதிநிறுவன மோசடி வழக்கு ஜன.19ல் சொத்துக்கள் ஏலம்
/
நிதிநிறுவன மோசடி வழக்கு ஜன.19ல் சொத்துக்கள் ஏலம்
ADDED : ஜன 13, 2024 01:25 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் செயல்பட்ட லக்ஸ்வர்யா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா லிமிடெட் நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.2 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் இது ஜன.19ல் ஏலம் விடப்படுகிறது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் 2014ல் லக்ஸ்வர்யா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா லிமிடெட் தனியார் நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் முதலீடு செய்தால் ரூ.லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். நிறுவனத்தை நடத்தியவர்கள் திடீரென தலைமறைவானர்.
பணத்தை கொடுத்து ஏமாந்த 1500க்கு மேற்பட்டோர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நிதிநிறுவனம் நடத்திய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் நிறுவனத்திற்கு சொந்தமான உசிலம்பட்டி, அம்மாபட்டி, ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்களை முடக்கினர்.
இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினரோடு இணைந்து நிலங்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முடக்கப்பட்ட நிலங்கள் ஜன.19ல் காலை 11:00 மணிக்கு வேடசந்துார் தாசில்தார் அலுவலகத்தில் ஏலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரும் தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.