சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து நடக்க விருந்த மறியல் ஒத்திவைப்பு
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து நடக்க விருந்த மறியல் ஒத்திவைப்பு
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 10:38 PM
கொடைரோடு:சுங்கச்சாவடியில் புதிய கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கொடைரோடு அருகே திண்டுக்கல்- மதுரை பைபாஸ் ரோட்டில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
உயர்ந்த கட்டணம்:
அதில் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்துத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த உள்ளூர் பாஸ் (மாதாந்திர கட்டணம்) ரூ.350 எனவும் அதில் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற திட்டத்தை ரத்து செய்து, தற்போது ரூ.360 ஆக உயர்த்தி, மாதத்திற்கு 50 முறை மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறைக்கு ரூ.75, இரண்டு முறைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு ஒரு முறைக்கு ரூ.260, இரு முறைக்கு ரூ.395 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இக்கட்டண உயர்வுக்கு உள்ளூர் வாகன ஓட்டிகள், தனியார் நிறுவனத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்.,7ல் மறியல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
இதனை அடுத்து அம்மையநாயக்கனுார் போலீசார் முன்னிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுடன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. பேரூராட்சித் தலைவர் செல்வராஜ், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், விவசாயிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
எட்டாத உடன்பாடு:
பேச்சு வார்த்தையில் கட்டண குறைப்பு செய்ய இயலாது. இருப்பினும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசி கட்டண குறைப்புக்கு ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்தனர். அப்போது சுங்கச்சாவடி நிர்வாகத்தினர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், வரும் அக்.,7ல் நடக்க இருந்த சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
