/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு விரிவாக்கத்தில் மூடப்பட்ட பொது மயான பாதை நெடுஞ்சாலை, பேரூராட்சித்துறைகள் அலட்சியத்தால் பிரச்னை
/
ரோடு விரிவாக்கத்தில் மூடப்பட்ட பொது மயான பாதை நெடுஞ்சாலை, பேரூராட்சித்துறைகள் அலட்சியத்தால் பிரச்னை
ரோடு விரிவாக்கத்தில் மூடப்பட்ட பொது மயான பாதை நெடுஞ்சாலை, பேரூராட்சித்துறைகள் அலட்சியத்தால் பிரச்னை
ரோடு விரிவாக்கத்தில் மூடப்பட்ட பொது மயான பாதை நெடுஞ்சாலை, பேரூராட்சித்துறைகள் அலட்சியத்தால் பிரச்னை
ADDED : ஜன 05, 2025 05:09 AM

சின்னாளபட்டி, : சின்னாளபட்டி கீழக்கோட்டை பொது மயான புதர் மண்டிய சூழலில் சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறையினர் மயானத்தின் பாதையை மண் கொட்டி நிரப்பியதால் உடல் அடக்க நேரங்களில் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.
சின்னாளபட்டி பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்காக இராமநாதபுரம் ரோட்டில் ஒரு பொது மயானம் உள்ளது. சின்னாளபட்டி பைபாஸ் ரோட்டில் காந்திகிராம ஓடை அருகே ஒரு பொதுமயானமும், செக்காபட்டி பகுதியில் வசிப்போருக்காக ஆரியநல்லுார் ரோட்டில் ஒரு மயானமும், சத்யா நகர் பகுதியில் 2 மயானங்களும் உள்ளன.
பேரூராட்சி துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அலட்சியத்தால் பல பொது மயானங்கள் பராமரிப்பின்றி கழிவுகள் குவிக்கும் குப்பை கிடங்காக மாறி வருகின்றன. இடங்களில் முள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் நேரங்களில் வழித்தடம் துவங்கி அடிப்படை வசதிகள் வரை இல்லாத சூழலில் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்கிறது. மேட்டுப்பட்டி மயானத்தில் உள்ளே கழிவுநீர் குளம்போல் தேங்கி இறந்தவர்களை அடக்கம் செய்ய முற்படும் போது தொழிலாளர்கள் பல நடைமுறை பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர்.இந்நிலையில் கீழக்கோட்டை பைபாஸ் ரோட்டில் விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலை துறையினர் பொது மயானத்தின் நுழைவுப் பகுதியை மண் நிரப்பி மூடிவிட்டனர். ஏற்கனவே மயானத்தின் அருகே உள்ள காந்திகிராமம் ஓடைப்பகுதி முழுவதும் பாலிதீன் குப்பைக் கழிவுகளால் நிரம்பி உள்ளது. இவை அப்பகுதியில் துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.இப்பகுதியில் வசிப்போர் சுவாச கோளாறு, தோல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்படைகின்றனர்.
தொற்று நோயால் அவதி
நாகஜோதி ,குடும்பத் தலைவி, சின்னாளபட்டி : பேரூராட்சி வார்டுகளில் சேகரமாகும் குப்பை சரிவர அகற்றப்படுவதில்லை. வணிக நிறுவனங்கள் குவிக்கும் ரோட்டோர குப்பையை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். பெரும்பாலும் கண்ட இடங்களில் கழிவுகளை குவித்து எரிக்கின்றனர். நீரோடைகளில் கழிவுகளை கொட்டுகின்றனர். நீராதாரம் உருவாக்கம் பராமரிப்பு என்ற நிலையில் குப்பை கழிவுகளை மறைத்து வைக்கும் பகுதிகளாக மாற்றி வருகின்றனர். மயானங்கள் உடல்களை எரிக்கும் இடங்களாக பயன்படுத்துவதை விட குப்பை குவிக்கும் கிட்டங்கிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியை கண்டுகொள்வதில்லை. பாலி்தீன், மருத்துவ கழிவுகளை குவிப்பதால் மழைக்காலங்களில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அடிக்கடி கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் அடர் புகை மண்டலம் உருவாகிறது. பலர் சுவாச, தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.
வீணாகும் பணம்
மருதமுத்து ,பா.ம.க., நிர்வாகி, சின்னாளபட்டி : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஏட்டளவில் மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. வார்டுகளில் சேகரம் ஆகும் கழிவுகள் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இந்நிலையில் அஞ்சுகம் காலனியில் இருந்த வரலாற்று கழிவுக்குவியலை அப்புறப்படுத்த 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை கூறி செலவினங்களை பட்டியலில் சேர்க்கின்றனர் .ஆனால் அவை மக்களை பாதுகாக்கும் வகையில் செலவிடப்படுவதில்லை. குப்பை சேகரத்திற்கான பல வாகனங்கள் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எரிபொருள், பராமரிப்பு செலவினம் வழக்கமாக தொடர்கிறது. அம்பாத்துறை, கலிக்கம்பட்டி, சீவல்சரகு ஊராட்சிகளின் எல்லைப் பகுதியை குப்பை கிடங்குகளாக மாற்றி உள்ளனர். தூர்ந்த, பூங்கா பகுதி கிணறுகளில் கழிவுகளை குவிப்பது தொடர்கிறது.
மீட்க வேண்டும்
வேளாங்கண்ணி ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய தலைவர், சின்னாளபட்டி : பெரும்பாலான ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சுற்றுச்சுவருடன் கூடிய மயானங்களை ஏற்படுத்தி வருகிறார். பேரூராட்சிகளில் இது தொடர்பான பிரச்னையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அலட்சியம் காட்டி வருகிறார். மயானங்களை மேம்படுத்துவதில் எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. பரவலாக நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மாயானங்கள், அததை சுற்றிய பகுதிகளில் பாலிதீன் குப்பை கழிவுகளை குவித்தல், எரித்தல் பணிகள் மட்டுமே நடக்கிறது. சின்னாளபட்டி கீழக்கோட்டை பொது மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு இறுதி காரியங்களுக்கான தண்ணீர் வசதிக்காக சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு உள்ள ஆழ்துளை கிணறு துார்ந்து கிடக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகர கூரையுடன் உள்ள காத்திருப்போர் கூடமும் சேதமடைந்துள்ளது. இங்கு மயானத்திற்கான மொத்தப்பகுதியை சர்வே செய்து சுற்றுச்சுவருடன் கூடிய இறுதி காரியங்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பேரூராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.