ADDED : நவ 23, 2025 03:12 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறியதாவது: 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் ரூ.50 முதல் ரூ.120 வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்குமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்ப குழந்தைகளிடம் வினாத்தாளுக்கு பணம் கொடு என்று கூறும் கல்வித்துறை அதிகாரிகள் கல்வியை வியாபாரமாக்கி விடுகிறார்கள்.
பள்ளிகளுக்கு தேவையான நிதி, உபகரணங்களை வழங்காததே காரணம். இந்த நிலைதான் 207 அரசு பள்ளிகள் மூடுவதற்கு வழிவகுத்துள்ளது.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் இதை கடுமையாக கண்டிக்கிறது. மாணவரிடமிருந்தும் எத்தகைய தொகையும் வசூலிக்கப்படக் கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும். இது அரசு கல்வி அமைப்பின் அடிப்படை கடமையாகும் என்றார்.

