/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை, பஸ் வசதியின்றி தவிக்கும் ஆர்.கோம்பை ஊராட்சி
/
சாலை, பஸ் வசதியின்றி தவிக்கும் ஆர்.கோம்பை ஊராட்சி
ADDED : ஜூலை 01, 2025 03:08 AM

குஜிலியம்பாறை:ஆர்.கோம்பை ஊராட்சியில் போதிய தார் சாலை, பாலம் வசதி இல்லாமல் மழைக்காலங்களில் ஐந்து கி.மீ.,சுற்றி செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர்.
ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி சின்னழகு நாயக்கனுார், புங்கம்பாடி, பேர்நாயக்கன்பட்டி, ஆனைகவுண்டன் பட்டி உள்ளிட்ட 35 கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் தொப்புயசாமி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான மக்கள் நுாற்பாலை, பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கோம்பையிலிருந்து கோவிலுார் ராமநாதபுரம், நாகைய கோட்டை உள்ளிட்ட அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு கூடுதலான மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆர்.கோம்பையில் இருந்து காலை 8:15 மணிக்கு ஒரு அரசு டவுன் பஸ் புறப்படுகிறது.
மாலை 4:35க்கு டவுன் பஸ் வருகிறது. இதனால் கூடுதலான கூட்டம் சேர்வதால் பள்ளி மாணவர்கள் நெருக்கடியாக பஸ்சில் செல்லும் நிலை உள்ளது.
இதை கருதி இங்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆர்.கோம்பை ரெட்டியபட்டி காலனியிலிருந்து ஆனை கவுண்டன்பட்டி செல்லும் மண் ரோட்டில் ஓடை குறுக்கிடுகிறது.
புளியம்பட்டி, குஜிலியம்பாறை, கரூர் செல்லும் மக்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் குறுக்கிட்டால் 5 கி.மீ., சுற்றி தான் செல்கின்றனர். இதனால் இங்கு ரோடு வசதி, பாலம் வசதி அவசிய தேவை என்கின்றனர் ஊராட்சி மக்கள்.
தொப்பியசாமி மலையடிவாரப் பகுதி என்பதால் காட்டு மாடுகள், மயில்கள், முயல்கள், நரிகள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. வறட்சி காலங்களில் போதிய குடிநீர் வசதியின்றி வனவிலங்குகள் தோட்டங்களை தேடி செல்லும் நிலை உள்ளது.
முட்புதராக காட்சி
வி.தர்மர், சமூக ஆர்வலர், தாசநாயக்கன்பட்டி: இங்குள்ள தாசமநாயக்கன்பட்டி,சின்னழகு நாயக்கனுார்,வைரப்பெருமாள்பிள்ளையூர் பகுதி மக்களுக்கான சுடுகாடு ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. முறையான சாலை வசதி இன்றி முட்புதராக காட்சியளிக்கிறது.
புங்கம்பாடியிலிருந்து ஆர்.கோம்பை செல்லும் வழியில் நல்லுார் அருகே அரை கிலோ மீட்டர் துாரம் ரோடு போடப்படாமலே உள்ளது. மண் பாதையை முதலில் மெட்டல் ரோடாகவும், பிறகு தார் ரோடாக மாற்றி அமைக்க வேண்டும்.
தேவை தண்ணீர் தொட்டி
வி.பெருமாள், ஊராட்சி செயலாளர், ஆர்.கோம்பை: ரெட்டியபட்டி காலனி முதல் ஆணை கவுண்டன்பட்டி மெயின் ரோடு வரை செல்லும் மண் சாலையை மெட்டல் சாலையாகவும், அதில் ஒரு பாலம் அமைக்க கோரியும் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.
ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திற்கும், எம்.எல்.ஏ., க்கும் முறைப்படி தபால் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் தொப்பியசாமி மலைப்பகுதியில் உள்ள வனவிலங்குகளின் நலன் கருதி கும்பப்புளி கோயில் அருகே மலையடிவாரத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.