UPDATED : அக் 24, 2026 11:20 PM
ADDED : அக் 24, 2026 07:17 PM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீரால் 30 மூடை அரிசி, 10 மூடை சர்க்கரை, 5 மூடை பருப்பு ஆகியவை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
நத்தம் அருகே சேத்துார் ஊராட்சி அரவங்குறிச்சியில் கூட்டுறவு ரேஷன் கடை செயல்படுகிறது. நேற்று (அக்.,23) நள்ளிரவு கனமழை பெய்ததில் இக்கடைக்குள் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவுக்கு தேங்கியது.
பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய 120 மூடை அரிசி, 15 மூடை சர்க்கரை, 10 மூடை பருப்பு ஆகியவை கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் கீழ் வரிசையில் வைக்கப்பட்டிருந்த 30 மூடை அரிசி, 10 மூடை சர்க்கரை, 5 மூடை பருப்பு ஆகியன நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ரேஷன் கடை தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் கடைக்குள் தண்ணீர் புகுந்து தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
