UPDATED : செப் 24, 2026 10:24 PM
ADDED : செப் 24, 2026 09:30 PM
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்துாருக்கு விழாக்காலம், விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்துாருக்கு செல்லும் மாணவர்கள், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர், மருத்துவமனை, பிற அலுவல்களுக்கு செல்வோர் திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தடங்களில் இருந்து வரும் பஸ்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
ஞாயிறு, விடுமுறை நாட்கள், விழாக்காலங்களில் ஒட்டன்சத்திரம் வருவதற்கு முன்பே இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாகி விடுகிறது. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து பயணிப்போர் பஸ்களில் நின்று கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
கோயம்புத்துாரில் இருந்து மதுரை செல்லும் பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை பஸ் புறப்பட்டவுடன் ஏறி கொள்ள கூறுவதால், ஒட்டன்சத்திரம் வரும் கல்லுாரி மாணவ, மாணவிகள், திருப்பூர் கம்பெனிகளில் வேலை செய்து விட்டு வரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்படும் வகையில் விழாக்காலம், விடுமுறை நாட்களில் கோயம்புத்துார், திருப்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
