/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் கொசுத்தொல்லை சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 6 வது வார்டு மக்கள்
/
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் கொசுத்தொல்லை சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 6 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் கொசுத்தொல்லை சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 6 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் கொசுத்தொல்லை சிரமத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 6 வது வார்டு மக்கள்
ADDED : ஜன 26, 2025 04:47 AM
திண்டுக்கல்,: போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லை, ரோட்டில் ஓடும் கழிவுநீர், ஆண்டுக்கணக்காக நடந்து வரும் சுரங்கப்பாதை பணி என நாள்தோறும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 6 வது வார்டு மக்கள்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர், நேருஜிநகர், பாண்டியன்நகர், பிள்ளையார்பாளையம், எல்.ஐ.சி.காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, பாலாஜிநகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ஆண்டுக்கணக்கான பணி நடந்து வரும் பழைய கரூர் ரோடு சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையால் எம்.வி.நகர் பகுதி மக்கள் மட்டுமல்லாது இந்த ரோட்டை பிரதானமாக பயன்படுத்தி வரும் பல ஊர் மக்கள், கல்லுாரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
குப்பையில்லா மாநகராட்சி திட்டத்தின் கீழ் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் குப்பை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் காலி இடம், ரோட்டோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது.
வழிப்போக்கர்களும் சாலை ஓரங்களில் குப்பையை கொட்டிச் செல்கிறன்றனர். இதனை கண்காணிக்க ஆள் நியமித்தும் பயனில்லாததால் குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோருகின்றனர்.
நேருஜி நகர் முதல் சந்தில் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. சாக்கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மண் கழிவுகளை அகற்றாததால் இப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.
பாதாள சாக்கடை இணைப்பு வீடுகளுக்கு சரிவர கொடுக்கவில்லை எனவும் இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். இது தவிர கொசு மருந்து அடிப்பதில்லை. அதோடு கால்நடைகள், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன.
கழிவுநீர்தான் பிரச்னை
சத்தியநாராயணன், நேருஜி நகர்: சாக்கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மண் கழிவுகளை அகற்றாமல் சாக்கடை யொட்டி அப்படியே போட்டுள்ளனர். துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டியதாக உள்ளது. கொசுமருந்தும் அடிப்பதில்லை.
கழிவுநீரும் ரோட்டில் ஓடுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமத்தோடு சென்று வருகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும்.
கொசு உற்பத்தி
செல்வராஜ், பழைய கரூர் ரோடு: குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் பெரும்பாலோனோர் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டிச்செல்கின்றனர். கழிவுநீர் பிரச்னை பிரதானமாக உள்ளது.
மழை காலம் வந்து விட்டால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பணிகள் நடந்து வருகிறது
சரண்யா, கவுன்சிலர் (தி.மு.க.,) : சுரங்கப்பாதை பணிகளை பொறுத்தவரையில் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம், தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம். நேருஜி நகரில் கழிவுநீர் பிரச்னை கவனத்திற்கு வந்துள்ளது.
அடிக்கடி மண் அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றுகிறோம். நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுரங்கப்பாதையையொட்டி கழிவுநீர் தொட்டி கட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த பணிகள் முடிந்தால் இந்த பிரச்னை இருக்காது. மற்றபடி பணிகள் எல்லாம் சரியாக நடந்து வருகிறது. குறை இருந்தால் நிவர்த்தி செய்யப்படும்,என்றார்.