/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு வாரத்திற்கு ஒரு முறை வரும் குடிநீர் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
/
ஒரு வாரத்திற்கு ஒரு முறை வரும் குடிநீர் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
ஒரு வாரத்திற்கு ஒரு முறை வரும் குடிநீர் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
ஒரு வாரத்திற்கு ஒரு முறை வரும் குடிநீர் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 44வது வார்டு மக்கள்
ADDED : டிச 29, 2024 04:58 AM

திண்டுக்கல்: துரத்தி கடிக்கும் தெரு நாய்கள்,ஆக்கிரமிப்புகளால் குறுகலான தெருக்கள், குதறும் கொசுக்கள்,வாரம் ஒருமுறை வரும் குடிநீர்,வடிகால்களுக்கு போடப்படாத மூடிகள்,சேதமான ரோடுகள் என்பன உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளால் திண்டுக்கல் மாநகராட்சி 44வது வார்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
புஷ்பவனம்,கிழக்கு சவேரியார் பாளையம்,அருந்ததியர் தெரு,முருகன் கோயில் தெரு,மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளில் சிக்கி மக்கள் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். தெரு நாய்கள் கூட்டமாக சுற்றுவதால் குழந்தைகளை கடிக்கின்றன. இதைப்பிடிக்க மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எப்போதாவது அதிகாரிகள் வருகின்றனர். வந்தபோதிலும் இங்கிருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லை. கண்துடைப்பிற்கு ஒருசில நாய்களை பிடிக்கின்றனர். அதையும் மீண்டும் இங்குள்ள தெருக்களில் கொண்டு விடுகின்றனர். பல பகுதிகளில் ரோடுகள் சேதமாக உள்ளதால் டூவீலர்,கார்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர். இங்குள்ள தெருக்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அவரசத்திற்கு கூட வாகனங்கள் உள்ளே வரமுடியாமல் வெளியில் நிற்கும் நிலை உள்ளது. இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் கொசுக்கள் இங்குள்ள கழிவுநீரில் உற்பத்தியாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை சிறிதாக இருப்பதால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் ஓடும் நிலை தொடர்கிறது. வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் குடிநீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்கள் அமைத்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் அதற்கான மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேறு பாதைகளில் செல்லும் நிலை தொடர்கிறது.
குடிநீர் பிரச்னை தாங்க முடியவில்லை
ரகுராமசந்திரன்,பா.ஜ.,நகர துணைத்தலைவர்,கிழக்கு சவேரியார் பாளையம்: 44 வது வார்டை பொருத்த மட்டில் ஏராளமான தெரு நாய்கள் கட்டுக்கடங்காமல் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் இவைகள் வீட்டிலிருந்து வெளியே வரும் குழந்தைகள்,முதியவர்களை கடிக்கின்றன. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வருவதால் மக்கள் தவிக்கிறோம். தினமும் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிகாலுக்கு மூடி வேண்டும்
கிறிஸ்டோபர்,தொழிலாளி,கிழக்கு சவேரியார் பாளையம்: எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை அகற்றாமலிருப்பதால் அவசர நேரத்தில் ஆம்புலன்சுகள் கூட வரமுடியாமல் மக்கள் திணறுகின்றனர். வடிகால்கள் நீண்ட நாட்களுக்கு முன் அமைத்துள்ளனர். ஆனால் அதற்கான மூடிகள் இதுவரை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் தினமும் நாங்கள் அவதிப்படுகிறோம். நாய்கள் தொல்லை அதிகம்
கணேசன்,கிழக்கு சவேரியார் பாளையம்: 44வது வார்டில் எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் தான் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் ரோட்டில் செல்லும் முதியவர்கள்,குழந்தைகள்,பெண்கள் அச்சப்படும் நிலை தொடர்கிறது. தொடர்ந்து நடக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோட்டில் நாய்களை பிடிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்: 44 வது வார்டில் ஆய்வு செய்து அங்குள்ள பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.