/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பு பகுதியில் திரியும் வனவிலங்குகள் அச்சத்தில் கொடைக்கானல் 22 வது வார்டு மக்கள்
/
குடியிருப்பு பகுதியில் திரியும் வனவிலங்குகள் அச்சத்தில் கொடைக்கானல் 22 வது வார்டு மக்கள்
குடியிருப்பு பகுதியில் திரியும் வனவிலங்குகள் அச்சத்தில் கொடைக்கானல் 22 வது வார்டு மக்கள்
குடியிருப்பு பகுதியில் திரியும் வனவிலங்குகள் அச்சத்தில் கொடைக்கானல் 22 வது வார்டு மக்கள்
ADDED : டிச 13, 2024 04:59 AM

கொடைக்கானல்: - குடியிருப்பு பகுதியில் திரியும் வனவிலங்குகளால் கொடைக்கானல் நகராட்சி 22 வது வார்டு மக்கள் தினமும் அச்சத்துடன் உள்ளனர்.
உகார்தேநகர், தைக்கால், கார்மேல்புரம், உட்காட் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அல்லல்படுகின்றனர். சரிவர எரியாத தெருவிளக்குகளால் இரவில் வெளியில் செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டுமாடுகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் தினமும் அச்சத்துடன் பொழுதை கழிக்கின்றனர். பட்டா இல்லாமல் அரசு சலுகை பெற முடியாது தவிக்கின்றனர். துார்வாரப்படாத சாக்கடையால் கொசு உற்பத்தியாக தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். சாக்கடை குழாய் பாலங்கள் ஆக்கிரமிப்பு என ஏராளமான பிரச்னைகளுடன் வார்டு மக்கள் உள்ளனர்.
போயே போச்சு வாக்குறுதி
நாகேந்திரன், டிரைவர் : வனப்பகுதி அருகே உள்ள பாத்திமா குருசரடி தைக்கால் பகுதிகளில் காட்டுமாடு, பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. தைக்கால் பகுதியில் பட்டா இல்லாது குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த ரோடுகளால் மக்கள் தடுமாறும் நிலை உள்ளது. சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக கவுன்சிலர் வாக்குறுதியளித்தும் இதுவரை செயல்படுத்தவில்லை.
பட்டா இல்லாது அவதி
வில்லியம், அ.தி.மு.க., வார்டு செயலாளர்: உகார்தேநகர் கிறிஸ்தவ சர்ச் அருகே செல்லும் குறுக்கு சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. திறந்த வெளி வாய்க்கால்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கார்மேல்புரம் முனியாண்டி கோயில் பகுதி குழாய் பாலத்தில் அடைப்பு உள்ளது. சென்பகனுார் பகுதி குழாய் பாலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் ரோட்டில் செல்கிறது. நகராட்சிக்கு வரி செலுத்தியம் பட்டா இல்லாது 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் தவிக்கின்றன .
வாக்குறுதி கொடுக்க வில்லை
அருள்சாமி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் இதுவரை ரூ. நான்கு அரை கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. உகார்தே நகர் பகுதியில் கிறிஸ்தவ சர்ச் அருகே உள்ள ரோடு சேதமடைந்துள்ளது. வாய்க்கால்கள் துார்வாரப்பட்டு.மேல்முடியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுப்பன்றி, மாடு, சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையிடம் தெரிவித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்காது மெத்தனப்போக்கோடு உள்ளனர். வனப்பகுதியை யொட்டியுள்ள வார்டு பகுதியில் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் குடியிருப்பு பகுதி வரை வேலி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மைதானம், சுகாதார வளாகம் கட்டித் தருவதாக எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை. முன்மாதிரியான வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

