/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக்கால் அவதி, சேதமான ரோட்டால் விபத்து அபாயம் அவதியில் கொடைக்கானல் 7 வது வார்டு மக்கள்
/
டாஸ்மாக்கால் அவதி, சேதமான ரோட்டால் விபத்து அபாயம் அவதியில் கொடைக்கானல் 7 வது வார்டு மக்கள்
டாஸ்மாக்கால் அவதி, சேதமான ரோட்டால் விபத்து அபாயம் அவதியில் கொடைக்கானல் 7 வது வார்டு மக்கள்
டாஸ்மாக்கால் அவதி, சேதமான ரோட்டால் விபத்து அபாயம் அவதியில் கொடைக்கானல் 7 வது வார்டு மக்கள்
ADDED : அக் 31, 2025 02:02 AM

கொடைக்கானல்:  குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் அவதிப்படும் பொதுமக்கள், சேதமான ரோட்டால் சிரமம், எரியாத தெரிவிளக்கு என பல்வேறு பிரச்னைகளில் கொடைக்கானல் 7 வது வார்டு மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ளது 7வது வார்டு. எம்.ஜி.ஆர்., நகர், மல்லி ரோடு, பர்னியல் ரோடு, கங்கா காம்பவுண்ட், டோபி கானல், தெசா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தெருவிளக்கு எரியாத நிலை, சாக்கடை கட்டமைப்பு சேதம், பட்டா இல்லாத நிலை, பாரபட்சமாக குப்பை அள்ளுவது, காட்டுமாடு, தெருநாய், சேதமடைந்த ரோடு,குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
சீரமைக்க வேண்டும் அழகர்சாமி, மல்லி ரோடு: வின்சென்ட் ஒர்க் ஷாப் பகுதியில் பாலம் சீரமைக்காமல் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் செல்கின்றன. பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் பொதுமக்களே தகரம் அடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் சரி வர எரிவதில்லை. காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் அள்ளப்படாத நிலை உள்ளது. பட்டா இல்லாததால் பலர் அவதிப்படுகின்றனர். சாக்கடைகள் துார்வாரப்படாமல் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. தற்போது அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோடுகள் தரமற்று சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் பட்டுப்போன மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வார்டு மறு வரையறை செய்ததில் குழப்பம் நீடிப்பதால் பிரச்னைகளை கவுன்சிலரிடம் கூறுவதில் சிக்கல் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
வார்டை கண்டுகொள்வதுஇல்லை பாண்டியன், எம்.ஜி.ஆர். நகர் : தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. தாழ்வான இப்பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் கன மழை நேரங்களில் கழிவுநீர் ஆறு போல் ஓடுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.  சாக்கடை கழிவுநீர் அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் கலந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் அவ்வப்போது மூடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதற்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு வரும் நிலையை மாற்றி நிரந்தரமாக தண்ணீர் குழாய் அமைத்தால் இப்பகுதி மக்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். குப்பைகள் அள்ளுவதில் பாரபட்ச நிலை உள்ளது. இப்பகுதியில் செயல்படும் இரு டாஸ்மாக் கடைகளால் குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர்.நாயுடுபுரம் டெப்போ பகுதியில் பஸ் ஸ்டாப் வசதியை ஏற்படுத்த வேண்டும். மல்லி ரோடு பகுதியில் ராட்சத பள்ளங்களால் மழை நீர் தேங்கி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மொத்தத்தில் கவுன்சிலர் வார்டை கண்டு கொள்வதில்லை.
நடவடிக்கை எடுக்கப்படும் பிரபா ஷாமிலி, கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் இதுவரை ரூ. 3.5 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. பர்னியல் ரோட்டில் பாலம் பணி ரூ. 15 லட்சத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் துவங்கி முழுமை பெறாமல் உள்ளது. இது குறித்து நகராட்சி உயராதிகளுக்கு கடிதம் மூலம் புகார் அளித்து பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. தெருவிளக்கு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.  சாக்கடை தூர்வரும் பணியும், கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். காட்டுமாடு வரும் வழிகளில் கேட் அமைக்க  ரூ. 10 லட்சத்தில் பணிகள் 4 இடங்களில் நடக்கிறது.  பட்டா இல்லாத வீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து வரும் உபரிநீரில்  ஓடையை ஒட்டியுள்ள தனியார் விடுதிகள் பழநியின் குடிநீர் ஆதாரமான ஒடையில் கழிவு நீர், குப்பைகளை கொட்டி மாசுபடுத்துகின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் விடுதியினர் தொடர்ந்து கழிவுகளை விடுகின்றனர். வார்டில் உள்ள புதர்கள் வரும் வாரத்தில் அகற்றப்படும். தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமித்து குப்பைகள் எடுக்கப்படும். வார்டுக்கு சென்று நடக்கும் பணிகளை நானே ஆய்வு செய்து வருகிறேன். எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒதுக்குப்புறமாக அகற்ற பழநி எம்.எல்.ஏ.,விடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாயுடுபுரம் டிப்போ பகுதியில் பஸ் ஸ்டாப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

