UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:46 PM
வத்தலக்குண்டு: வெங்கடாஸ்திரிகோட்டையில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு மூன்று மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டியது. இதனை கண்டித்து சில நாட்களுக்கு முன் அப்பகுதி பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த அதிகாரிகள் குடிநீர் பிரச்னையை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் வாக்குறுதி அளித்து பல நாட்கள் ஆகியும் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வத்தலக்குண்டு – மதுரை ரோட்டில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றிய அதிகாரிகள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மீண்டும் உறுதி அளித்தனர்.
