/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு சேதம், பஸ் வசதிக்காக ஏங்கும் மோர்பட்டி
/
ரோடு சேதம், பஸ் வசதிக்காக ஏங்கும் மோர்பட்டி
ADDED : செப் 27, 2025 04:29 AM

வடமதுரை: சேதமான ரோடு, மூடி கிடக்கும் வடிகால் கட்டமைப்பு,போக்குவரத்து வசதி குறைவால் பல கி.மீ., துாரம் நடக்கும் பள்ளி சிறுவர்கள் என பல பிரச்னைகளால் மோர்பட்டி பகுதியினர் பரிதவிப்பில் உள்ளனர்.
மோர்பட்டி சித்துவார்பட்டி ரோட்டில் இருந்து மேற்கு தெரு பகுதிக்கு செல்லும் 500 மீட்டர் துார ரோடு சேதமடைந்து கிடக்கிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் தொட்டி இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் 3 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடக்கிறது.
மோர்பட்டி, சித்துவார்பட்டி வழியே புதிய வழித்தடத்தில் டவுன் வசதி கோரிக்கை கிடப்பில் இருப்பதால் இப்பகுதி சார்ந்த பள்ளி மாணவர்கள் குறிப்பாக சிறு வயதுடையோர் அதிக வயது மாணவர்களுடன் போட்டியிட்டு அய்யலுார் திசை பஸ்களில் ஏற முடிவதில்லை.
இதனால் இவர்களில் பலர் வடமதுரை நால்ரோடு சந்திப்பு பகுதியில் வந்து நின்று கொண்டு அவ்வழியே செல்லும் டூவீலர்களை மறித்து 'லிப்ட்' கேட்டு மோர்பட்டி வரை பயணிக்கின்றனர்.
இதுபோன்ற சூழலில் மாணவர்களுக்கு விரும்பதகாத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. டூவீலர்களில் 'லிப்ட்' கிடைக்காத நிலையில் பல கி.மீ., துாரம் ரோட்டில் விபத்து ஆபத்துடன் நடந்து செல்கின்றனர். பள்ளி கூடும், விடும் நேரங்களில் மட்டுமாவது வடமதுரை, மோர்பட்டி, சித்துவார்பட்டி, கொம்பேரிபட்டி வரை புதிய வழித்தடத்தில் பஸ் விட வேண்டும்.
இதன்மூலம் பிலாத்து, தென்னம்பட்டி பகுதியில் தற்போது காணப்படும் நெரிசல்,இதன் காரணமாக அடிக்கடி நடக்கும் போராட்டங்களும் முடிவுக்கு வரும். மோர்பட்டி தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கட்டமைப்புகள் மண் மூடி கிடப்பதால் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் வாங்க ஆபத்து பயணம் இ.நாகராஜ், மாவட்ட தலைவர், ஹிந்து மக்கள் கட்சி, மோர்பட்டி: மேற்கு தெருவில் இருக்கும் சிறு குடிநீர் தொட்டி மூலம் மட்டுமே தண்ணீர் வினியோகம் நடக்கிறது. அதிக துாரம் நடக்க வேண்டியுள்ளது. சமுதாய கூடம் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது.
ஊராட்சியின் பெயர் மோர்பட்டி என இருந்தும் இங்கு வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவ கிளை நிலையம், ஊராட்சி அலுவலக கட்டடம் என அனைத்தும் கொல்லபட்டியிலே உள்ளன. துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது.
பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால் நான்குவழிச்சாலைக்கு கிழக்கு பக்கம் வாடகை இடத்தில் செயல்படுகிறது. இப்பகுதியினர் ஆபத்தான முறையில் நான்கு வழிச்சாலையை கடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.
-அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு ஏ.தாமரைக்கண்ணன், வேன் டிரைவர், மோர்பட்டி: மோர்பட்டி மேற்கு தெருவில் சிமென்ட் ரோடுகள் ஆக்கிரமிப்பால் குறுகி கிடப்பதால் மக்கள் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. வடிகால் கட்டமைப்புகள் மண்மூடி கிடக்கின்றன. இங்குள்ள நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் திசையில் பயணிக்க பஸ்சிற்காக காத்திருக்க நிழற்கூடை இல்லை. இதனால் வெயில், மழை நேரங்களில் அதிக சிரமம் உள்ளது. தற்போது எதிர்பக்கம் மட்டும் இருக்கும் நிழற்கூடத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களது டவுன் பஸ் வருகையை பார்த்த பின்னர் நான்குவழிச்சாலையை கடந்து எதிர்பக்கம் ஓடும் நிலை உள்ளது. இதனால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்புள்ளது.
இதன் முக்கியத்துவம் கருதி திண்டுக்கல் பஸ்கள் நின்று செல்லும் பகுதியிலும் நிழற்கூடை , தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.