/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதை ஆக்கிரமிப்பு; சாக்கடையில் அடைப்பு
/
பாதை ஆக்கிரமிப்பு; சாக்கடையில் அடைப்பு
ADDED : செப் 21, 2025 04:35 AM
திண்டுக்கல்: பல ஆண்டுகளாக துார்வாரப்படாத சாக்கடை,பாதையில் ஆக்கிரமிப்பு என திண்டுக்கல் 17வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
அரசன் நகர், ரங்கநாயகி நகர், சிவா நகர், ஆண்டாள் நகர், லட்சுமி சுந்தரம் காலனி, எம்.எஸ்.பி., ஆசிரியர் காலனி என முக்கிய பகுதிகளை கொண்ட இந்த வார்டில் அடிப்படை பிரச்னைகள் மீது யாரும் கவனம் செலுத்தவில்லை.மழை பெய்தால் தெருக்களில் பெருக்கெடுக்கும் நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
சாக்கடை அடைப்பால் தவிக்கும் மக்கள் கழிவுநீர் வெளியேற்ற வழியின்றி தவிக்கின்றனர். அரசன் நகரில் பாதாள சாக்கடையில் மேன்ேஹால் இல்லாமல் திறந்தவெளியாக கிடக்கிறது. இதை கல், பேப்பர் வைத்துமறைத் திருக்கிறனர்.
தெருக்களில் ஆங்காங்காங்கே குவித்து வைக்கப்படும் குப்பை குடியிருப்பு பகுதிக்குள்ளே எரிக்கப்படுவதால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்படுகிறது. சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
ரோட்டில் தேங்கும் மழை நீர் துரை கணேசன், மாவட்ட செயலாளர், பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டப்பிரிவு : இந்த வார்டில் பல ஆண்டுகளாக மக்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை. ஜி.டி.என்., சாலையிலிருந்து அரசன் நகருக்கு செல்லும் மெயின் ரோட்டில் 15 அடிக்கு சாலை ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் விபத்து அபாயம் உருவாகுவதோடு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதை அகற்றக்கோரி 4 ஆண்டாக போராடி வருகிறோம். அதிகாரிகளும், கவுன்சிலரும் கண்டுகொள்ளவில்லை. முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது சாலையில் பெருக்கெடுக்கும் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள்ளும் புகுந்துவிடுவதால் டூவீலர், மின்மோட்டார் போன்ற உடமைகளும் செயலற்று போகின்றன.
கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரிசெய்தாலே இப்பகுதியில் மழைநீர் தேங்குவதை சரிசெய்யலாம்.
புதிய ரோடும் வீண் உதயகுமார், எஸ்.எஸ்.பி., ஆசிரியர் காலனி: வார்டில் ஆங்காங்கே குப்பை குவித்து வைக்கப்படுகிறது. மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டால் முறையாக அகற்றப்படுவதில்லை. குவியும் குப்பையை தீ வைத்து எரிப்பதால் குடியிருப்புகளை புகை சூழ்கிறது. முதியோர்கள், உடல்நலம் சரியில்லாதோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கால்வாய்களில் மண்நிரம்பி அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் தேங்குகிறது. பாதாள சாக்கடை நீர் வீடுகளுக்குள் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாலை அமைத்துள்ளனர். ஆனால் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் குண்டும், குழியுமாகிறது.
அனைத்து பணிகளும் நிறைவேற்றம் வெங்கடேஷ், கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வார்டில் இருக்கும் அத்தனை மக்களும் குற்றம் சொன்னால் நான் வேலை செய்யவில்லை என சொல்லலாம். யாரோ ஒருசிலர் சொல்லும் குற்றச்சாட்டுகளை வைத்து எப்படி சொல்வது. வார்டில் அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன். குற்றம் சொன்னவர்கள் என் வார்டில் குடியிருப்பவர்களா என சந்தேகப்பட வேண்டியுள்ளது என்றார்.