/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு வசதி அறவே இல்லை; பரிதவிப்பில் கருங்கல் ஊராட்சி மக்கள்
/
ரோடு வசதி அறவே இல்லை; பரிதவிப்பில் கருங்கல் ஊராட்சி மக்கள்
ரோடு வசதி அறவே இல்லை; பரிதவிப்பில் கருங்கல் ஊராட்சி மக்கள்
ரோடு வசதி அறவே இல்லை; பரிதவிப்பில் கருங்கல் ஊராட்சி மக்கள்
ADDED : மார் 09, 2024 09:05 AM

குஜிலியம்பாறை : கருங்கல் ஊராட்சியில் ரோடு வசதி அறவே இல்லை .கூடுதல் ரேஷன் கடையை துவக்கவும், ஊராட்சியை இரண்டாகப் பிரித்து புதிய ஊராட்சியை உருவாக்குவது அவசியமாகிறது .
கே.ஆனைப்பட்டி, டி.செட்டியூர், சின்னத்தம்பிபட்டி, வேடபட்டி, ஜக்கம்பட்டி, தீண்டாக்கல், சின்னழகுபுரம், கும்மாயன்பட்டி உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில், கருங்கல் வருவாய் கிராமம் .தீண்டாக்கல் வருவாய் கிராமம் என 2 வருவாய் கிராமங்கள் அடங்கி உள்ளன. இங்கு ஆனைபட்டியில் மெயின் ரேஷன் கடையும், சின்னத்தம்பிபட்டி ,சின்னழகுபுறத்தில் பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. ஆனால் டி.செட்டியூரை மையமாக வைத்து புதிதாக பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். கரும் பாறைப்பட்டி - சுக்காம்பட்டி ரோடு மண் ரோடாகவே உள்ளது. ஆணைபட்டி - சுக்காம்பட்டி, ஆணைபட்டி - வடக்கு களம், மதுக்கரை வீரியபட்டி உள்ளிட்ட 5 ரோடுகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன.
காட்டூரில் 70 வீடுகள் உள்ள நிலையில் இதுவரை காவிரி குடிநீர் விநியோகம் அறவே இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள் .
ஊராட்சியை பிரிக்கலாம்
எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், ஆனைபட்டி:கருங்கல் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது. இங்குள்ள தீண்டாக்கல் கிராமத்தை தீண்டாக்கல் ஊராட்சியாக தனியாக பிரித்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளதால் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
அறவே இல்லை சாலை வசதி
பி.சீரங்கன், சமூக ஆர்வலர், சுக்காம்பட்டி: ஊராட்சியில் சேதமடைந்துள்ள ஐந்து தார் ரோடுகளை புதிய தார் ரோடுகளாக மாற்றி அமைக்க வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வேடசந்துார் தொகுதியை வறட்சி பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.
ஊராட்சியில் கடும் வறட்சி
வி.சங்கப்பன், விவசாயி, டி.செட்டியூர்: ஊராட்சி பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு விட்டது. இன்னும் ஒரு மாதம் கடந்தால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதே சிரமம் ஆகிவிடும். இவ்வளவு வறட்சியில் மக்கள் போதிய வேலை வாய்ப்பு இன்றி சிரமப்படுகின்றனர். கரூர் திண்டுக்கல் காவிரி குழாய் செல்லும் பகுதியில் கருங்கல் ஊராட்சி உள்ளதால் காவிரி குடிநீர் ஓரளவுக்கு கை கொடுக்கிறது.

