/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றித்திரியும் மாடுகள், வீட்டிற்குள் புகும் நாய்கள்
/
சுற்றித்திரியும் மாடுகள், வீட்டிற்குள் புகும் நாய்கள்
சுற்றித்திரியும் மாடுகள், வீட்டிற்குள் புகும் நாய்கள்
சுற்றித்திரியும் மாடுகள், வீட்டிற்குள் புகும் நாய்கள்
ADDED : நவ 24, 2024 04:33 AM

திண்டுக்கல் : தெருவெங்கும் சுற்றி திரியும் மாடுகள், வீட்டிற்குள் புகும் தெருநாய்கள் என நாள்தோறும் அச்சத்திலும், புலம்பலிலும் உள்ளனர் திண்டுக்கல் மாநகராட்சி 2 வது வார்டு மக்கள்.
ஆர்.எம்.காலனி, மேற்கு அசோக் நகர், செட்டிநாயக்கபட்டி வண்டிபாதை என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் முக்கிய பிரச்னையாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பது மாடுகளின் நடமாட்டமும், தெருநாய்களின் அட்டகாசமும் தான்.
பிற பகுதிகளிலிருந்து மாடுகளை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். அவை குப்பை திண்பது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செல்வது என பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மாடுகளின் கூடாரமாக இப்பகுதி உள்ளது. மாடுகளின் உரிமையாளர் யார் என்பதே தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதியினர். செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை ரோட்டில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நோய் வாய்பட்டு ரத்தகறைகளோடு உலா வரும் இவைகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் இதனால் நோய்தொற்று என குழந்தைகளுடன் அச்சமாக இருப்பதாக வார்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாக்கடைகளில் மணல் அதிகமாக உள்ளது. குப்பை ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. மேற்கு அசோக் நகரில் தண்ணீர் தொட்டி வைக்கக்கோரி பலமுறை கோரியும் இழுத்தடிப்பே நடக்கிறது. தாடிகொம்பு ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையம் திராளான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் ரோட்டின் ஓரத்தில் ஆபத்தான இடத்தில் உள்ளது.
மாடுகள் அதிகம் உலா
வீரராஜ், ஆர்.எம்.காலனி: மாடுகள் அதிகளவில் தெருக்களில் உலாவுகின்றன. நட்டு வைத்திருக்கும் செடிகளை நாசம் செய்கிறது. காளை மாடுகளை மட்டுமே உலா விடுவது போல் உள்ளது. இவை பிற மாடோடு சேர்ந்து இனப்பெருக்கம் அதிகமாகும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். இரவு நேரங்களில் கொக்கி போட்டு மாடுகளை தேவைக்கு ஏற்றாற்போல் பிடித்து செல்கின்றனர். மாடுகள் குப்பையை தின்பதால் அவற்றிற்கும் ஆபத்து ஏற்படுகிறது.
ரோட்டில் பாதாள சாக்கடை நீர்
சுகுமார், தாடிகொம்பு ரோடு: அசோக் நகர் விரிவாக்கப் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. குப்பைத் தொட்டி இல்லா மாநகராட்சி என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளை அகற்றியதால் குப்பை ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. துாய்மை பணியாளர்களும் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகின்றனர். மாநகராட்சியிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
நாய்கள் அட்டகாசம்
ஸ்ரீதர், வண்டிபாதை ரோடு :நாய்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சமாக உள்ளது. எத்தனையோ முறை கூறிவிட்டோம். தெரு நாய்களை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. குப்பைகள், சாக்கடைகளில் புரண்டு விட்டு தெருக்களில் வருவதால் நோய் தொற்று ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. சில நாய்கள் என்றால் பரவாயில்லை, கணக்கில்லாமல் இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனுதினமும் நாய்களோடு அவதிப்பட வேண்டியதாக இருக்கிறது.
அங்கன்வாடி கட்டடம் தயாராகிறது
கணேசன், கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்) : மாடு, நாய்கள் பிரச்னைகள் உள்ளது. பல முறை நானும் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். தற்போது கலெக்டர் ,எம்.பி., யிடமும் முறையிட்டுள்ளோம். மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 3 மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்றபடி போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைத்தால் அனைத்து பிரச்னைகளும் விரைவில் சரியாகிவிடும் என்றார்.