ADDED : செப் 17, 2026 09:02 PM
பழநி, செப்.18-
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றுவர பயன்படுத்தும் ரோப்காரில் புதிதாக 8 பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
இக்கோயிலில் ஜூலை 20 முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இயந்திரங்கள் அனைத்தும் என்.டி.டி., சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து முக்கிய உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டு பரிசோதனை நடந்ததும் ‘கியர் பாக்ஸ்’ பொருத்தும் பணிகள் நடந்தது. ரோப் கார் கீழ் நிலையத்தில் பெருந்திட்ட வரைவின் படி கூரை பராமரிப்பு, பால்ஸ் சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல், அழகிய விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
இந்நிலையில் ரோப்காரில் முன்பு பொருத்தப்பட்டு இருந்த அதே வடிவமைப்பில் கரூரில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான ரோப்கார் பெட்டிகள் செப்.,9ல் பழநிக்கு வந்தன.
10 பெட்டிகள் கொண்டு வரப்பட்டதில் 8 பெட்டிகளை ரோப் காரில் இணைக்கும் பணி நடந்தது. ஒரு பெட்டிக்கு 300 கிலோ வீதம் எடை கற்களை ஏற்றி சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.
சோதனை ஓட்டம் முடிந்ததும் பொறியாளர்கள் ஒப்புதலுக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
