ADDED : நவ 26, 2025 04:36 AM
வானவில் மன்ற போட்டிகள் அறிவியல் கண்காட்சி
திண்டுக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகள், அறிவியல் கண்காட்சி திண்டுக்கல்லில் நடந்தன.
அரசு பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஆராய்தல் நோக்கில் வானவில் மன்றங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக வானவில் மன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் போட்டி நடத்தப்பட்டு மாவட்ட போட்டி நடந்தது.
15 வட்டாரங்களிலும் இருந்து தலா 3 குழுக்கள் என 45 குழுக்களை சேர்ந்த 135 மாணவர்கள் பங்கேற்றனர். தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், அதை தவிர்த்தல், இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன . மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பள்ளி கல்வி துறையால் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. வானவில் மன்ற கருத்தாளர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளை மாவட்ட பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர், பால தண்டபாணி அறிவியல் இயக்கம் வளர்மதி, ஏர் இந்தியா மணிஅற்புதராஜ் ஒருங்கிணைந்தனர்.

