/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3ம் இடத்திற்கு சீமான் - விஜய் போட்டி
/
3ம் இடத்திற்கு சீமான் - விஜய் போட்டி
ADDED : செப் 16, 2025 04:46 AM
திண்டுக்கல்: ''2026 சட்டசபை தேர்தலில் 2 ம் இடத்திற்கு அ.தி.மு.க., 3 ம் இடத்திற்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இடையே போட்டி ஏற்படும்,'' என, திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி கூறினார்.
அவர் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார். கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லாத்துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார்.
தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 2வது இடத்திற்கு வரவேண்டும் என முயற்சி செய்கிறார். 3வது இடத்திற்கு சீமானும், விஜயும் முயற்சி செய்கின்றனர். இவர்களால் ஒரு தொகுதியைக்கூட தமிழகத்தில் பிடிக்க முடியாது. தி.மு.க., குறித்து விமர்சனம் செய்ய செய்ய முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
விஜய் தேர்தல் களத்தை சந்திக்கவில்லை. மூன்று தேர்தல் களத்தை சீமான் சந்தித்துள்ளார். ஆனால் அவர் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என கூறுகிறார். சீமானுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. எங்களுடன் போட்டி இல்லை. அனைத்து தரப்பு ஓட்டுகளும் தி.மு.க.,விற்கு குவியும்.
மற்ற யாரும் அதிகபட்சம் 25 ஆயிரம் ஓட்டுகளை கூட பெற மாட்டார்கள். அவர்களில் இருந்து அ.தி.மு.க.,வினர் 5 ஆயிரம் ஓட்டு அதிகமாக வாங்குவார்கள். பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.முக., வெற்றி பெறும்.
பொழுதுபோக்கிற்காக மட்டுமே விஜயை மக்கள் பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தவரை நேரில் பார்க்கவே மக்கள் கூட்டம் கூடுகிறது. விஜயை காண வந்தவர்களைவிட முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக கூட்டம் சேரும். யாரோ தூண்டிவிட்டு விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. விஜயை காண வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. மறைந்த முதல்வர் கருணாநிதியை போன்று 3 மடங்கு உழைப்பை கொடுக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் களத்தில் நீங்கள் பார்க்காத மிகப்பெரிய வெற்றி தி.மு.க.,விற்கு கிடைக்கும் என்றார்.