UPDATED : நவ 07, 2026 02:57 AM
ADDED : நவ 06, 2026 05:06 PM

செந்துறை: செந்துறை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் லிங்கமநாயக்கன் குளத்தில் கொட்டுவதால் நீர் மாசடைந்து வருகிறது.
நத்தம் அருகே செந்துறை ஊராட்சியில் 30 ஏக்கர் பரப்பில் லிங்கமநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு வடமதுரை ஒன்றியம் பஞ்சம்தாங்கி மலைப்பகுதி, மாமரத்துப்பட்டி, புதுார் நீர் ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக நீர்வரத்து ஏற்படுகிறது.
இக்குளம் நிறைந்தால் சுற்றியுள்ள 80 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். குளத்தின் உபரிநீர் பாலாறு வழியாக சிங்கம்புணரி, திருப்பத்துார் வரை சென்று அங்குள்ள குளங்களும் நிறையும்.
இந்நிலையில் இவ்வூராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக மேலாண்மை செய்து அப்புறப்படுத்தாமல் லிங்கமநாயக்கன் குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அவை மலைபோல் குவிந்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் குளத்து நீரில் குப்பைக்கழிவுகள் கலப்பதால் மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலையின் சூழலை பாதிக்கும் நிலை உள்ளது.
செந்துறை விவசாயி கணேசன் கூறியதாவது:
செந்துறையின் விவசாய, குடிநீர் ஆதாரமாக உள்ள லிங்கமநாயக்கன்குளத்தில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. இதனால் குளத்து நீர் மாசடைகிறது. குப்பைக்கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குளத்தின் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெற்று இயற்கை உரம் தயாரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை உடனடியாக அகற்றுவதுடன், மீண்டும் அங்கு குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை ஊராட்சியின் குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்த செந்துறை- கருத்தநாயக்கன்பட்டி ரோட்டில், குடியிருப்புகள் அருகில் இல்லாத பழைய கிடங்கை மீண்டும் பயன்படுத்த ஊராட்சி நிர்வாகம் பரீசீலனை வேண்டும்.
நீர்நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை. இதனை பொதுமக்களும் உணர்ந்து குப்பையை தரம் பிரித்து வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.
