/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோசமான ரோடால் விபத்து; ஆக்கிரமிப்பால் அல்லல் சிரமத்தில் திண்டுக்கல் 36வது வார்டு மக்கள்
/
மோசமான ரோடால் விபத்து; ஆக்கிரமிப்பால் அல்லல் சிரமத்தில் திண்டுக்கல் 36வது வார்டு மக்கள்
மோசமான ரோடால் விபத்து; ஆக்கிரமிப்பால் அல்லல் சிரமத்தில் திண்டுக்கல் 36வது வார்டு மக்கள்
மோசமான ரோடால் விபத்து; ஆக்கிரமிப்பால் அல்லல் சிரமத்தில் திண்டுக்கல் 36வது வார்டு மக்கள்
ADDED : ஆக 10, 2025 02:43 AM

திண்டுக்கல்: தோல்வியடைந்த பாதாள சாக்கடைத்திட்டம், போடப்படாத ரோடுகள், துார்வராத சாக்கடை என திண்டுக்கல் மாநகராட்சி 36வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.
நாகல் நகர் சிறுமலை செட் ரோடு, சந்தை ரோடு, செல்வகாளியம்மன் கோவில்தெரு, குருசாமி ஆசாரி சந்து, குயவர் சந்து உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பலதரப்பட்ட தொழில் செய்யும் மக்கள் வசிக்கின்றனர். வார்டில் சாலைகள் வசதி சுத்தமாக இல்லை . சாக்கடை யில் மண் நிரம்பி துார்வாரப்படாமல் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு தோல்வியால் மழைக்காலத்தில் இப்பகுதி ரோட்டில்தான் சாக்கடை கழிவுகள் ஓடும் நிலை உள்ளது. 30 ஆண்டாகியும் போடப்படாத ரோடுகளால் மக்கள் தினமும் இன்னல்கள் அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் வார்டு மக்கள்.
கண்டுகொள்வதில்லை கோபிநாதன், சமூக ஆர்வலர்: சந்தை ரோடு ஆக்கிரமிப்பால் திணறுகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றினாலே பாதி பிரச்னை தீரும். மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த ரோட்டில் விருப்பப்பட்ட இடத்தில் கடைகளை விரித்து ஆக்கிரமிப்பாளர்கள் புகுந்து விடுகின்றனர். அதிகரிக்கும் வாகனப்புகையால் இப்பகுதி முழுவதும் காற்று மாசடைகிறது. ஏற்கனவே ரூ.400 கோடி செலவழித்து தோல்வியடைந்த பாதாள சாக்கடைத்திட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை.
இதனால் கழிவு நீர் வெளியேற வழியின்றி சிரமத்தை சந்திக்கிறோம். கால்வாயை துார்வாரக்கோரி அதிகாரிகளிடம் சொன்னால் ஆள் பற்றாக்குறை எனக்கூறி தட்டிக்கழிக்கின்றனர். தண்ணீர் வரி, வீட்டுவரி, பாதாள சாக்கடை வரி என தவறாமல் வசூல் செய்யும் அதிகாரிகள் மக்களுக்கு பிரச்னை என்றால் மட்டும் கண்டுகொள்வதில்லை.
எந்த வேலையும் நடக்கவில்லை சுமதி, குருசாமி ஆசாரி சந்து: 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரோடைதான் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். மோசமான ரோடால் நடக்கவே பயமாக உள்ளது. டூவீலரில் செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் எப்போது யார் மீது மோதப்போகிறார்களோஎன்ற அச்சத்துடன்தான் செல்ல வேண்டியுள்ளது. தண்ணீருக்காக வைக்கப்பட்டுள்ள டேங்குகள் பயன்படாமல் உள்ளது. மோட்டார், பைப் பழுதுபார்க்க கூறியும் எந்த வேலையும் நடக்கவில்லை. வார்டின் மற்ற பகுதிகளில் நடக்கும் சின்ன, சின்ன வேலைகள் கூட இங்கு நடப்பதில்லை. மழைக்காலத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் கால்வாய் உயரத்தை உயர்த்த வேண்டும்.
அழுத்தம் கொடுப்பேன் பவுமிதா பர்வின், கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் வேலைகள் செய்ய தாமதமாகிறது. ஒப்புதல் கிடைக்கபெறாத மற்ற இடங்களிலும் விரைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க கேட்டிருக்கிறோம்.
பாதாள சாக்கடை பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் ரோடு அமைக்கும் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக ரோடு அமைத்த பின்பு அதே இடத்தில் பாதாள சாக்கடைக்காக குழித்தோண்டும் நிலை ஏற்பட்டால் மக்கள் வரிப்பணம் வீணாகும்.
அதனால் தாமதம் ஏற்படுகிறது. சந்தைரோடு ஆக்கிரமிப்பு அகற்ற பலமுறை மாநகராட்சியோடு போராடிவிட்டோம். ஆள்பற்றாக்குறை, பொறுப்பு அதிகாரிகள் இல்லாததால் கிடப்பில் உள்ளது. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பேன் என்றார்.