/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் ஓடும் கழிவுநீர்...இருள் சூழ்ந்த தெருக்கள் அல்லாடும் திண்டுக்கல் 26 வது வார்டு மக்கள்
/
ரோட்டில் ஓடும் கழிவுநீர்...இருள் சூழ்ந்த தெருக்கள் அல்லாடும் திண்டுக்கல் 26 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவுநீர்...இருள் சூழ்ந்த தெருக்கள் அல்லாடும் திண்டுக்கல் 26 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவுநீர்...இருள் சூழ்ந்த தெருக்கள் அல்லாடும் திண்டுக்கல் 26 வது வார்டு மக்கள்
ADDED : ஜன 19, 2025 05:24 AM

திண்டுக்கல்: பல ஆண்டுகளாக சாக்கடை இல்லாமல் ரோட்டில் செல்லும் கழிவுநீர், கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றாத அதிகாரிகள், ஹாயாக சுற்றி வரும் விஷ சந்துகள், தெரு விளக்குகள் இல்லாததால் இருள் மூழ்கும் தெருக்கள் என ஏராளமான பிரச்னைகளில் திண்டுக்கல் மாநகராட்சி 26 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
முகமதியாபுரம், மக்கான் தெரு, மதினா காம்பவுண்ட், நத்தர்சா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை கொண்ட இந்த வார்டில் எத்தனையோ ஆண்டுகளை கடந்தபோதிலும் சாக்கடை வசதிகள் இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. மழை நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் கழிவுநீரோடு கலந்து பாடாய்படுத்துகிறது. மழைக்காலம் முடிந்தும் தேங்கும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கொசு உற்பத்திக்கு துணை போகிறது. சுற்றித்திரியும் கால்நடைகள், தெரு நாய்களால் எங்கும் மக்கள் நடமாட முடியவில்லை. பல தெருக்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இரவில் மக்கள் வெளியில் வர முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக மதினா காம்பவுண்ட் பகுதியில் இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உலாவுகின்றன. யானை தெப்பம் கால்வாய்களில் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்துகிறது. இதுதவிர நகரில் உள்ள கோழி கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டி சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை வசதி இல்லை
ஜமால் முகமது,மதினா காம்பவுண்ட்: நகரில் சாக்கடை இருந்தால் மட்டும் தான் சுகாதாரக்கேடு, தொற்று நோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தடுக்க முடியும். ஆனால் 26 வார்டில் உள்ள பல தெருக்களில் இன்னும் சாக்கடை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் தினமும் இன்னல்களை சந்திக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது எங்கள் பகுதி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.
தெரு விளக்கு வேண்டும்
அப்துல்லா கான், முகமதியா புரம்: தெரு விளக்கு இல்லாமல் மதினா காம்பவுண்ட் பகுதியில் மக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னையால் இரவில் 26 வது வார்டு மக்கள் வெளியில் வருவதையே தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தெரு விளக்குகள் புதிதாக அமைக்க வேண்டும் என பல முறை புகாரளித்து விட்டோம். ஆனாலும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சரி செய்யப்படும்
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்: 26 வது வார்டு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். சாக்கடை வசதிகள் இல்லாத தெருக்களில் ஆய்வு செய்து அதையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல தெருக்களில் தற்போது தான் புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.