ADDED : மே 01, 2025 06:49 AM

பழநி: குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பழநி நகராட்சி 8 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேற்குரத வீதி, ஆரியர் தெரு, மங்கலம் தெரு, நடுத்தெரு, பச்சமுத்து சந்து,அய்யனாரப்பன் சந்து, பழனிச்சாமி வீதி, திரு.வி.க வீதி, முத்துலிங்கசாமி சந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளது.
இதனால் குழந்தைகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது . சந்துகள் அதிகம், கோயில்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இங்கு போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். குடிநீரில் சில நாட்களாக சாக்கடை நீர் கலந்து வருவதால் இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தொற்று அபாயம்
பாக்கியலட்சுமி, டெய்லர், முத்துலிங்க சுவாமி சந்து: சில நாட்களாக குடிநீர் வரும் குழாயில் தண்ணீர் வரும்போது முதலில் கருமை நிறத்தில் சாக்கடை கலந்த நீர் வருகிறது. அதன் பின் தண்ணீர் தெளிவாக வந்தாலும் சாக்கடை நீர் கலந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. நோய் தொற்று அபாயம் உருவாகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்களால் விபத்து
சதீஷ்குமார், வியாபாரம், லட்சுமிபதி சந்து : இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலர்களில் செல்லும் போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் ,முதியோர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடையை திறங்க
பாலசுப்பிரமணியன், தனியார் ஊழியர், காளஹஸ்திரி சந்து: பாதாள சாக்கடை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது. கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ள ரேஷன் கடையை விரைவில் திறக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தை சரி செய்ய வேண்டும்.
விரைவில் சரி செய்யப்படும்
இந்திரா , கவுன்சிலர் (தி.மு.க.,) : குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். விரைவில் சரி செய்யப்படும். புதிய ரேஷன் கடை கட்டபட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. இ சேவை மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் அறிவுறுத்தல் படி மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நாய் தொல்லை,கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்