/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை கழிவு, ஆகாய தாமரையால் பாழாகும் குளம்
/
சாக்கடை கழிவு, ஆகாய தாமரையால் பாழாகும் குளம்
ADDED : அக் 12, 2024 05:04 AM

பழநி: பழநி வையாபுரி குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாலும் ஆகாய தாமரை செடி என சுகாதாரக் கேடுடன் பாழாகும் நிலை தொடர்கிறது .
பழநி வையாபுரி குளம் 2000 ஆண்டுகள் பழமையானது . தற்போது 300 ஏக்கரில் உள்ள வையாபுரி குளத்தில் 5 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.இக்குளம் மூலம் நேரடியாக 700 ஏக்கர் விவசாய பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது இங்கு சாக்கடை கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். இதோடு ஆகாய தாமரை செடி ஆக்கிரமிப்பும் உள்ளதால் குளம் மாசடைகிறது. குளத்தின் கரைப்பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையுடன் நோய் தொற்றும் ஏற்படுகிறது. வையாபுரி குளத்தின் கரைகளை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி குளத்தில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல தண்ணீராக மாற்ற வேண்டும்.
தேவை பாதாள சாக்கடை
ராஜாமுஹமது, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் : வையாபுரி குளத்தினை துார்வாரினால் நீர் தேங்கும் அளவு அதிகரிக்கும். விவசாயத்திற்கு மட்டுமில்லாமல் உபரி நீர் அதிக அளவில் பெறலாம். தி.மு.க., அரசின் ஆமை வேக செயல்பாட்டால் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்படாமலே உள்ளது. இதை நிறைவேற்றினால் சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படும். குளத்தில் உள்ள சுகாதாரக் கேடு தவிர்க்கப்படும். மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாது.
கழிவுநீர் கலக்கிறது
அஜித், ஹிந்து முன்னணி: வையாபுரி குளம் மிகவும் புனிதமானது. தற்போது கழிவுநீர் கலப்பதால் ஆகாய தாமரை செடிகள் அதிக அளவில் உள்ளது. இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவு நீர் கலப்பதால் கொசுத்தொல்லை அதிக அளவில் ஏற்படுகிறது. குளம் ரோட்டில் செல்லும் போது துர்நாற்றம் விசுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தேவை நடவடிக்கை
பிரகாஷ், விவசாயி : பழநி ஜி.பி.எஸ்., சர்வே பணிகள் மூலம் ஆக்கிரமிப்புகள் இனம் கண்டறிந்து அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்து நீரை நன்னீராக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் கரைகளை மேம்படுத்தி பூங்காக்கள் அமைக்கவும் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.