/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை; தொற்று அபாயத்தில் சின்னாளபட்டி பேரூராட்சி
/
பள்ளி, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை; தொற்று அபாயத்தில் சின்னாளபட்டி பேரூராட்சி
பள்ளி, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை; தொற்று அபாயத்தில் சின்னாளபட்டி பேரூராட்சி
பள்ளி, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை; தொற்று அபாயத்தில் சின்னாளபட்டி பேரூராட்சி
ADDED : மே 16, 2024 05:36 AM

சின்னாளபட்டி : அரைகுறையாக நடந்த ரோடு சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள், அள்ளப்படாத சாக்கடை கழிவு பிரச்னைகளால் சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அசுத்தநீர் குடியிருப்புகளை சூழ்ந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
நெடுஞ்சாலை துறை சார்பில் சில மாதங்களுக்கு முன் சின்னாளபட்டி பேரூராட்சி உட்பட்ட மெயின் ரோடுகள் விரிவாக்கம் நடந்தது. ரோட்டோர சாக்கடை போதும் தெருக்களில் இருந்து வரும் அசுத்த நீர் வெளியேறும வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. பல இடங்களில் மேடு பள்ளங்களால் அசுத்தநீர் தேங்க துவங்கியது.
பேரூராட்சி சார்பில் சமீபத்தில் நடந்த பேவர் பிளாக் ரோடு பணியிலும் அதிகாரிகள் அலட்சியத்தால் முறைகேடு புகார்கள் எழுந்தன. தெருக்கள் தோறும் பல இடங்களில் கழிவுநீர் குட்டைகளாக காட்சியளித்தன. வடிகால் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதி குடியிருப்போர் பாதிப்படையும் அவலம் நீடிக்கிறது.
5வது வார்டுக்கு உட்பட்ட பூஞ்சோலை பகுதி பொது கழிப்பறையில் இருந்து அவ்வப்போது வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் தேவாங்கர் பள்ளி ரோடு வழியே பொம்மையசாமி கோயில் தெருவை கடந்து செல்கிறது.
பராமரிப்பற்ற கால்வாயில் கழிவுகள் மேவிய நிலையில் செப்டிக் டேங்க் கழிவுநீர் சமீபத்திய மழைநீருடன் கலந்து தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. தேவாங்கர் பள்ளி மெயின் ரோட்டில் தேங்கும் அசுத்த நீரால் வாகனங்கள், பாதசாரிகள் கடந்து செல்ல முடியவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு
வெங்கடசாமி ,ஸ்டுடியோ உரிமையாளர், சின்னாளபட்டி : பேரூராட்சி பகுதிகளில் சாக்கடை சரிவர பராமரிப்பதில்லை. மெயின் ரோடு, பொம்மையசாமி கோயில் ரோட்டில் நடந்த சீரமைப்பு பணிகளை கண்காணிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். மேடு, பள்ளங்களுடன் சில வாரங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சாக்கடை கழிவுநீர் கடந்து செல்ல ஏதுவாக இல்லை. கழிவுகள், மண் மேவிய நிலையில் அசுத்த நீர் தேங்குகிறது. சாரல் மழை நேரத்தில் கூட ரோடு முழுவதும் அசுத்த நீர் பரவியுள்ளதால் பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிப்படைகின்றனர். வணிக நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கிறது.
தொற்று பாதிப்பு
ஆனந்தம்மாள்,குடும்ப தலைவி, சின்னாளபட்டி : பேரூராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட தண்ணீர் வினியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரித்து விட்டது. குளறுபடி அலட்சியத்தால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாக்கடை வடிகால் பராமரிப்பு இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் அசுத்த நீர் புகுகிறது. மழைக்காலங்களில் வெகுவாக இப்பிரச்னை அதிகரித்து தொற்று பாதிப்புகளால் பலரும் சிரமப்படுகின்றனர். முழுமையாக துார் வாரி கழிவுகளை அப்புறப்படுத்துவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும்.
சுவர்களை உயர்த்த வேண்டும்
கண்ணன், சலூன் கடை உரிமையாளர், சின்னாளபட்டி :வடிகால் அமைத்தபோது தண்ணீர் கடந்து செல்லும் வகையில் சீரமைப்பு நடக்கவில்லை. அதிகாரிகள் பாராமுகமாக இருந்து விட்டனர். மேடான பகுதியை மேலும் உயர்த்தி எங்கள் பகுதியில் தாழ்வான சூழலை ஏற்படுத்தி விட்டனர்.
மழைக்காலங்களில் ரோட்டோர கழிவுகள், மணலுடன் வடிகால் நிரம்பி அசுத்த நீர் வெளியேறுகிறது. பேரூராட்சி பணியாளர்கள் அவ்வப்போது வடிகால் பராமரிப்பு பணிக்காக வருகின்றனர். முழுமையாக துார் வாருவதில் கவனம் செலுத்துவதில்லை. தாழ்வான பகுதி வடிகால்களின் பக்கச்சுவர்களை உயர்த்த வேண்டும்.