ADDED : ஜூன் 28, 2025 11:42 PM
வத்தலக்குண்டு: புதுப்பட்டி, காமராஜபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூ.1 கோடி செலவில் புதிய சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.இதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு வத்தலக்குண்டு பேரூராட்சி பணிகளை துவக்கியது. அரசு ஒதுக்கீடு செய்த இடம் கள்ளர் சீரமைப்பு துறைக்கு சொந்தமானது என கூறி சமுதாயக்கூடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியினர் சமுதாயக்கூடம் கட்ட வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ''அரசு சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்த இடம் வேறு, கள்ளர் சீரமைப்பு துறைக்கு சொந்தமான இடம் வேறு. ஆனால் சிலர் சுய ஆதாயத்திற்காக வீண் வதந்திகளை பரப்பி சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க முயல்கின்றனர்'' என்றனர் .
செயல் அலுவலர் சரவணகுமாரிடம் கேட்டபோது, ''சமுதாயக்கூடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.
கலெக்டர் பரிந்துரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் கள்ளர் விடுதிக்கு சொந்தமான இடம் என கூறி ஒரு சிலர் கட்டுமான பணியை தடுத்து விட்டனர். பேரூராட்சிக்கு வழங்கிய இடத்தை மீண்டும் அளவீடு செய்து வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். சமுதாய கூட பணிகள் விரைவில் தொடங்கப்படும்'' என்றார்.