/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சோலார் மின் உற்பத்தி: மக்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்
/
சோலார் மின் உற்பத்தி: மக்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்
சோலார் மின் உற்பத்தி: மக்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்
சோலார் மின் உற்பத்தி: மக்களிடம் அதிகரிக்கும் ஆர்வம்
ADDED : ஜூன் 28, 2025 11:48 PM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீடுகளில் சோலார் அமைத்து மின் பயன்பாடு பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு புதிதாக 4113 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் தேவைக்காக தெர்மல், காற்றாலைகள், அணுமின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தெர்மல் நிலையங்களில் நிலக்கரி பயன்படுத்தியும், அணு மின்நிலையங்களில் அணு மூலக்கூறுகள் மூலமும் மின்உற்பத்தி நடக்கிறது. காற்றாலை மின் உற்பத்தியைக்காட்டிலும் இவை இரண்டிலும் செலவு, பராமரிப்பு அதிகம்.
அதிகரித்து வரும் மின் தேவையாலும் செலவினங்களை குறைத்து அரசுக்கு வருவாய் ஆதாரங்களை பெருக்கவும் சூரிய ஒளி, நீர், காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்தும் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் பசுமை வழித்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.
வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவது, அதிக மின் பயன்பாடு உள்ள வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் மின் தேவையை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது. பசுமை மின் பயன்பாடு, குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பயன்களால் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைப்பதை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.
மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் கூறியதாவது: சூர்யகர் திட்டத்தின் மூலம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் 900க்கு மேற்பட்ட வீடுகள் சோலார் மின் திட்டத்தில் பயன்பெறுகின்றன. மேலும் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட்கள் மொத்தம் 900 பேர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உள்ளனர். விருப்பமானவர்கள் மூலம் சோலார் பொருத்திக்கொள்ளலாம்.
தோராயமாக 3 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம் செலவாகும். வங்கிக்கடன் வசதியும் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் ஒருமுனை இணைப்புள்ள வீடுகளுக்கு புதிய மீட்டர் பொருத்த ரூ.2ஆயிரத்து 520, மும்முனை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 720 பதிவுக்கட்டணம் செலுத்தவேண்டும்.
இம்மாவட்டத்தில் 2025- 2026 நிதியாண்டில் 4113 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். பேனல் அமைக்க விரும்புவோர் www.pmsuryaghar.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.