/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடக்கம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:52 AM

திண்டுக்கல் : மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நேற்று தொடங்கிய நிலையில் இதை திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற ,கிராம பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக ,நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நேற்று(ஜூலை 15) முதல் ஆக., 14 வரை 112 முகாம்கள் நடக்கின்றன.
நேற்று 6 இடங்களில் இந்த முகாம்கள் நடந்தன.
திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தா மண்டபத்தில் அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். நகர்ப்புறங்களில், 13 துறைகள் வாயிலாக 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில், 15 துறைகள் வாயிலாக 46 சேவைகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிஷ்னர் செந்தில் முருகன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க., பொருளாளர் சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர் பங்கேற்றனர்.
வேடசந்துார் : அம்மாபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் துவக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் சிக்கந்தர், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, ரவிசங்கர், பொன்ராம், மாரிமுத்து, சாகுல்ஹமீது பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பித்தால் தகுதி உள்ளவர்களுக்கு 45 நாட்களில் கிடைக்கும். மகளிர் பஸ்களில் செல்வதற்கு கட்டணமில்லா சலுகையை இந்தியாவிலே முதன்முதலாக வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேலைவாய்ப்பு தொழில்நெறி மைய உதவி இயக்குனர் பிரபாவதி, தாசில்தார் சஞ்சய்காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் சுவேதா, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.