தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அடர் குறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: வறட்சியால் எண்ணற்ற மரங்கள் காய்ந்து வீண்

அடர் குறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: வறட்சியால் எண்ணற்ற மரங்கள் காய்ந்து வீண்

அடர் குறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: வறட்சியால் எண்ணற்ற மரங்கள் காய்ந்து வீண்


ADDED : அக் 02, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: கடும் வறட்சி, போதிய பராமரிப்பு இன்றி வேடசந்துார் ஒன்றிய கிராமங்களில் உருவாக்கப்பட்ட அடர் குறுவனங்களில் 90 சதவீத மரங்கள் காய்ந்து வீணாகி உள்ளன. போதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்தி அவற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சின்னழகுநாயக்கனுார், ஆத்துார் ஒன்றியத்தில் சிங்காரக்கோட்டை புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டதால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஊராட்சி பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பாட்டில் இருந்தன. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் மரம் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகம் உள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து அடர் குறுவனங்கள் (மியாவாக்கி) உருவாக்கப்பட்டது. இங்கு வேம்பு, புளி, புங்கை, மா, கொய்யா, தேக்கு என பல வகையான மரக்கன்றுகள் தேர்வு செய்து நடப்பட்டன. ஒரே இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வரை அடர்த்தியாக நடவு செய்து முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. வரும் காலங்களில் பறவைகள் சரணாலயமாக இது மாறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது.

வேடசந்துார் ஒன்றியம் வி.புதுக்கோட்டை, நாகம்பட்டி, இ.சித்துார் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடர்குறுவனங்கள் அமைக்கப்பட்டன. உள்ளாட்சி நிர்வாகங்கள் பொறுப்பில் இருந்தவரை இவை நன்கு பராமரிக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத நிலையில் ஊராட்சிகளின் செயல்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் அடர் குறுவனங்களில் மரங்களின் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் போதிய பருவமழை இல்லாததால் ஏற்பட்ட கூடுதல் வறட்சி காரணமாக அடர் குறுவனங்களில் 90 சதவீத மரங்கள் காய்ந்து கருகி விட்டன.

அரசு ஒரு திட்டத்தை கூடுதல் செலவில் செயல்படுத்தும் நிலையில் அதனை ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் அலட்சியமாக பராமரிப்பின்றி போனதால் சிறிய அளவில் பசுமைக்காடுகளை உருவாக்கும் அரசின் நோக்கம் கிடப்பில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அடர் குறுவனங்களில் மரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதா, புதிதாக போர்வெல் அமைக்க தேவையுள்ளதா என்பதை ஆய்வு செய்து மரங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இனியாவது கவனம்...

வி.புதுக்கோட்டை ஊராட்சியில் தோப்புப்பட்டி, கேத்தம்பட்டி ஆகிய இரு இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அடர் குறுவனம் அமைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காய்ப்புக்கு தயாராக இருந்த 120 தென்னை மரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்கள் காய்ந்துவிட்டன. வறட்சியை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். போர்வெல் அமைத்தோ அல்லது தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றியோ கூட மரங்களை காப்பாற்றி இருக்கலாம். இடைப்பட்ட 2 மாதங்களில் தான் இந்த பாதிப்பு. இனி வரும் காலங்களில் இதுபோன்ற அடர் குறுவனம் அமைத்தால் கூடுதல் கவனத்துடன் முறையாக பராமரிக்க வேண்டும்.

– மகாமுனி, சமூக ஆர்வலர், வி.புதுக்கோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us