எப்போது 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனம்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் விளையாட்டு திறன்
எப்போது 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனம்; கேள்விக்குறியாகும் மாணவர்களின் விளையாட்டு திறன்
UPDATED : செப் 19, 2026 07:49 PM
ADDED : செப் 19, 2026 07:44 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களை விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் 93 பள்ளிகளில் காலியாக உள்ள உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், மைதானமே இல்லாத 30 பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பில் மைதானங்களை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் தற்போது முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் செஸ், கேரம், கூடைப்பந்து, கால்பந்து, தடகளம், யோகா, சிலம்பம், பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் அடங்கும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதிய பயிற்சி வழங்குவதில் உடற்கல்வி ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. இவர்கள் மாணவ, மாணவிகளின் விளையாட்டு தனித்திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து மேம்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் பங்கேற்க வைப்பர்.
மாவட்டத்தில் 93 அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ள விபரம் மாவட்ட கல்வித்துறை கற்பித்தல் பணியிடங்களுக்கான ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் பள்ளிகளில் நடக்காதது உறுதியாகி உள்ளது.
மேலும் 30 பள்ளிகளில் மைதானங்களே இல்லாத நிலையால் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ள மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:
1950 இந்திய அரசு உடற்கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு வழங்கிய அறிக்கை பள்ளிகளில் உடற்கல்வி கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரை வந்தது. 1984ல் தேசிய விளையாட்டுக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் உடற்கல்வி விளையாட்டும் கல்வியோடு அங்கமாகின.
தற்போது 2026ல் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உடற்கல்வி வகுப்புக்களை கட்டாயமாக்கி விரிவான உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தீய பாதையில் செல்லாமல் தடுப்பது உடற்கல்வி மட்டுமே.
அனைத்து விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க உடற்கல்வி கற்பது அவசியமாகிறது. உடற்கல்வி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் சுய ஒழுக்கத்துடன் பள்ளிப்படிப்பை முடித்துவிடுவர். பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவர்.
இவ்வளவு நன்மை தரக்கூடிய உடற்கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மைதானங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
