/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீரின்றி தவிப்பு: காந்திகிராமம் மின் குடியிருப்பின் அவலம்
/
குடிநீரின்றி தவிப்பு: காந்திகிராமம் மின் குடியிருப்பின் அவலம்
குடிநீரின்றி தவிப்பு: காந்திகிராமம் மின் குடியிருப்பின் அவலம்
குடிநீரின்றி தவிப்பு: காந்திகிராமம் மின் குடியிருப்பின் அவலம்
ADDED : அக் 09, 2024 05:34 AM

சின்னாளபட்டி : காந்திகிராமம் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் குடிநீர், ரோடு, சுகாதார வசதிகளுக்காக மக்கள் தவிக்கும் அவலம் பல மாதங்களாக நீடிக்கிறது.
ஆத்துார் ஒன்றியம் காந்திகிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட மின்வாரிய ஊழியர் குடியிருப்பில் 70-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாசிக்கின்றன. இதுதவிர போலீஸ் ஸ்டேஷன், வி.ஏ.ஓ., அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் உள்ளன.
ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் வெளியூர் பயணிகள், இப்பகுதியினர் என தினமும் நுாற்றுக்கணக்கானோர் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரோடு வசதி இல்லை. பல தெருக்களில் சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. சமீபத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு, குண்டும் குழியுமாக கிடக்கிறது. ரோட்டோர குப்பை கழிவுகள் சரிவர அள்ளப்படாமல் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. குடிநீர் வினியோக குளறுபடியால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர். தெருக்களில் புதர் செடிகள் அடர்ந்துள்ளன. கொசுத்தொல்லை அதிகரிப்பால் தொற்று பரவல் அபாயம் நீடிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான சிமென்ட் ரோடு
--ராஜாராம், மின்வாரிய குடியிருப்போர் சங்க தலைவர், காந்திகிராமம்: சில தெருக்களில் மட்டுமே சிமென்ட் ரோடு அமைத்துள்ளனர். இவையும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. சமீபத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு சமதளமாக இல்லாததால் மழை நீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்குகிறது. சாக்கடை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. இவற்றில் கழிவுகள், மண் அதிக உயரத்திற்கு மேவியுள்ளது. அசுத்த நீர் செல்ல வழியின்றி மழை நீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
---அச்சத்தில் குடியிருப்போர்
சுந்தரம்,மின்வாரிய குடியிருப்போர் சங்க செயலாளர்,: தெருக்களில் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் தொங்குகிறது. விபத்து அபாய சூழலில் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். பல்வேறு தெருக்களில் அடர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடக்கிறது.
போதிய தண்ணீர் வசதியின்றி இப்பகுதியினர் தவிக்கின்றனர். விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து பலர் பாதிப்படையும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.
--வாரம் ஒரு முறையே தண்ணீர்
கருப்பபிள்ளை,மின்வாரிய குடியிருப்போர் சங்க பொருளாளர் : ஜல் ஜீவன் மிஷன் திட்டம் முழுமையாக செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கல் நடக்கிறது. வினியோக நேரத்தை குறைத்து விட்டனர். மேடு பள்ளங்களுடன் கூடிய ரோடு போன்ற பிரச்னைகளால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. ரயில்வே கேட் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை குப்பை தொட்டிகளை தவிர்த்து கொட்டப்படும் கழிவுகள் திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்பப்படுவதில்லை.

