தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் விலை திடீர் உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் விலை திடீர் உயர்வு
UPDATED : நவ 07, 2026 07:33 PM
ADDED : நவ 07, 2026 07:30 PM
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் ஸ்வீட், பேக்கரி கடைகளில் இனிப்பு, கார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டது. திண்பண்டங்கள் தரமற்ற முறையில், தயாரிப்பு தேதி இல்லாமல் விற்கப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
தீபாவளி என்றாலே புத்தாடைகளுக்கு அடுத்தபடியாக நம் மனதுக்குள்ளும், நாவிலும் இனிப்பது பலகாரங்கள் தான். மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு, காரங்களை வழங்கி தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரம், சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தற்காலிக இனிப்புக் கடைகள் அமைக்கப்பட்டன. தவிர நகரின் பிரபல இனிப்புக் கடைகள், பேக்கரிகள் சார்பில் சிறப்பு தீபாவளி பலகார விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘பேமிலி பேக்’, ‘கிப்ட் பேக்’ உள்ளிட்ட சிறப்பு பேக்கேஜ்களில் பலகாரங்கள் விற்கப்பட்டது. சாதாரண இனிப்பு, கார வகைகள் கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டன. பால் ஸ்வீட் வகைகள் ரூ.600க்கு விற்பனை ஆனது.
ஆனால் பண்டிகை நேரத்தைப் பயன்படுத்தி சில கடைகளில் அறிவிக்கப்படாத முறையில் திடீரென விலை உயர்வு செய்யப்பட்டு கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:
வழக்கமாக ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்ட சாதாரண இனிப்பு, கார வகைகள், நேற்று திடீரென கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு ரூ.400 என விற்கப்பட்டது. இதேபோல் பால் பொருட்களால் செய்யப்படும் ‘மில்க் ஸ்வீட்ஸ்’ வகைகள் கிலோ ரூ.650 முதல் ரூ.700 வரை விற்கப்படுகின்றன. இந்த முறையற்ற விலை உயர்வால் பண்டிகையை கொண்டாட நினைக்கும் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வு ஒருபுறமிருக்க, தரமற்ற முறையில் இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதிகள் இருப்பதில்லை. தற்காலிக, பிரபல கடைகளில் பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இனிப்பு, காரங்கள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்தே செய்கின்றனர்.இதுகுறித்த குற்றச்சாட்டுகள், புகார்கள் எழுந்த போதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றனர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பண்டிகை காலத்தை பயன்படுத்தி லாப நோக்கில் தரமற்ற முறையில் உணவு பொருட்கள், திண்பண்டங்கள் விற்கப்படுவதை தடுக்கவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன்படி புகார்கள் வரப்பெற்ற ஸ்வீட் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகள் எடுத்துள்ளனர். அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி இல்லாமல் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
