/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
/
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
மூன்றாவது மொழியை கற்பது எங்கள் எதிர்காலத்திற்கு நல்லது தானே
ADDED : பிப் 20, 2025 05:53 AM

வந்தால் மகிழ்ச்சி
-எம்.என்.பிரத்திகா
வடமதுரை
தமிழகத்தில் தற்போது 2 மொழிகள் கற்கும் நிலையில் கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு என்பது சிறப்பானது. இந்த வாய்ப்பு ஏற்கனவே சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. எங்களை போன்ற அரசு, அரசு உதவி பெறும் மாநில திட்ட பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. பொருளாதார வசதி படைத்த மாணவர்கள் தனியாக ஹிந்தி படித்து தேர்வு எழுதுகின்றனர். அரசியல் பார்வை இல்லாமல் நீண்ட கால நோக்கில் மும்மொழி கொள்கை நடைமுறைக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
வளர்ச்சிக்கு நல்லது தானே
-சந்தோஷ்
நத்தம்
நாளிதழ்கள் மூலம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொண்டேன். மத்திய அரசு நாங்கள் தற்போது படித்து வரும் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதில் சாராம்சமாக உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்த கல்விக் கொள்கை மூலம் மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் எனக்கு எதிர்காலத்தில் தொழில், வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பாக இருக்கும். சில அமைப்புகள் இதனை எதிர்க்கின்றனர். அது ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. மாணவர்கள் மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்வதால் அவர்கள் வளர்ச்சிக்கு நல்லது தானே.
பள்ளியிலே கிடைப்பதால் மகிழ்ச்சி
-கிஷோர்குமார்
பழநி
மாநில பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் படித்து வருகிறோம். ஒரு மொழி ஒரு மனிதனுக்கு சமம். மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொண்டால் இன்னொரு மனிதர்களுடன் வாழ்வதற்கு சமம். இதில் ஒரு மொழி திணிப்பு என்ற கருத்து இல்லை. மூன்றாவதாக எங்களுக்கு பிடித்த மொழியை படிக்க தயாராக உள்ளோம். வேறு மொழி வேண்டாம் என்ற கருத்து எங்களிடம் இல்லை. மாணவர்களின் சில பெற்றோர்கள் தனியாக வேறு மொழியை படிக்க தனி வகுப்புக்கு அனுப்பி வருகின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் போது அது மாநில அரசு பாடத்திட்ட பள்ளியிலே கிடைத்தால் வரவேற்கத்தக்கது.
வேலைவாய்ப்புக்கு ஏற்றது
-என். தியானவர்ஷன்
ஒட்டன்சத்திரம்
சி.பி.எஸ்..இ., பள்ளியில் மூன்றாவது மொழியாக ஹிந்தியும் கற்று வருகிறேன். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் உள்ள கலாசார பண்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய தடையாக இருப்பது மொழி பிரச்னையே. சி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஹிந்தியையும் ஒரு பாடமாக படிப்பதால் கல்லுாரி முடித்த பிறகு பிற மாநிலங்களில் பணிபுரிய வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். மேலும் புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் அந்த மொழியில் உள்ள இலக்கிய வளங்களை கற்று கொள்ள முடியும். சிறு குழந்தைகள் புதிய மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து மூன்றாவது ஒரு மொழியை கற்று கொள்வதால் நன்மைதான் அதிகம்.
ஹிந்தி படிப்பது தவறு இல்லை
--பி.கிருஷ்ணபாண்டி
செம்பட்டி
ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியில் படிப்பது அவற்றின் முழு பரிமாணத்தை புரிந்து கொள்ள உதவும். பள்ளிகளில் தமிழும் ஆங்கிலமும் மொழி பாடமாக இருப்பது போல் ஹிந்தியும் விரும்பும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் கல்விக் கொள்கைகளில் மேம்பாட்டை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வி முடித்த பின் எதிர்காலத்திற்கான வேலை, வணிகம், வாழ்க்கை முறைகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சூழலில் இந்த கொள்கை மிகவும் உதவிகரமாக இருக்கும். நாட்டின் பல மொழி பாரம்பரியத்தை தொடரவும், மொழியறிவின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கவும் கூடுதலாக ஹிந்தியை படிப்பதில் தவறு இல்லை.
3வது மொழி கற்பதே நல்லது
-ஹர்ஷவர்தன்
திண்டுக்கல்
சி.பி.எஸ்.இ., வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் வெளி மாநிலம், நாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்கின்றனர். அங்கே செல்லும் போது தமிழ், ஆங்கிலம் தவிர்த்து கூடுதலாக ஒரு மொழி தேவை. மாணவர்கள் வெளியில் ஹிந்தி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று எளிதில் படிக்கின்றனர். மூன்றாவது மொழியை படிப்பதால் நம் எதிர்காலம் தான் நல்ல முறையில் அமையும்.

