/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இருள் சூழ்ந்த மாநகர்; மங்கும் மாநகராட்சி
/
இருள் சூழ்ந்த மாநகர்; மங்கும் மாநகராட்சி
ADDED : செப் 20, 2024 05:57 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பெரும்பாலான பகுதிகளில் ரோட்டோர மின் விளக்குகள் எரியாமலிருப்பதால் இரவு,அதிகாலை நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. கண்டுக்காத மாநகராட்சி அதிகாரிகளால் குற்ற சம்பவங்களும் தொடர்கிறது.
திண்டுக்கல் நகரில் தெருக்கள்,ரோட்டோரங்களில் மாநகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகள் எரியாமலும், சேதமாகியும் உள்ளன.
ஒருசில இடங்களில் மின் விளக்குகள் இருந்த சுவடுகளே இல்லாமல் மறைந்துள்ளது.
தொடரும் இப்பிரச்னையால் நகரில் இரவு,அதிகாலை நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஒரு வித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. தொடரும் இப்பிரச்னை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல தரப்பிலும் புகார் கொடுத்த போதிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கின்றனர்.
அதிகாலையில் மக்கள் அதிகம் நடைபயிற்சி மேற்கொள்ளும் ரவுண்ட்ரோடு அதிகமாக இருள் சூழ்ந்திருக்கிறது.
எஸ்.பி., முகாம் அலுவலகம் தொடங்கி மெங்கில் ரோடு வரையிலான ரோட்டில் மின் விளக்குள் சரிவர எரிவதில்லை.
திருச்சி ரோடு உள்ளிட்ட முக்கியரோடுகளிலும் விளக்குகள் எரியாமல் உள்ளன. வாகனங்களின் வெளிச்சத்தை பயன்படுத்தியே பாதசாரிகள் பயணிக்கும் நிலை உள்ளது. இதை அதிகாரிகளும் அடிக்கடி பார்க்கின்றனர். இருந்தபோதிலும் அவர்களுக்கும் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை
தெரு விளக்குள் எரியாமலிருப்பதால் குற்றவாளிகள் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் இரவில் பெண்கள் பக்கத்து வீட்டுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னை மீது மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதை கலெக்டரும் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.